மூவார், ஏப்.8-

மலேசிய தேர்தல் ஆணையத்தை விமர்சிக்கும் நோக்கில் பேசிய நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர் துன் டாக்டர் மகாதீர், இந்திய சமுதாயத்தை இழிவுப்படுத்தும் சொல் என கருதப்பட்டுவரும் ‘கெளிங்’ எனும் சொல்லைப் பயன்படுத்தியது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று ஜொகூர், மூவாரில் நடைபெற்ற நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பேசிய துன் மகாதீர், நம்பிக்கைக் கூட்டணியிலுள்ள உறுப்பு கட்சிகள் ஒரே சின்னத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற வேண்டுமென வெளியாகியிருக்கும் செய்திகள் குறித்து கருத்துரைக்கையில் அவர் இவ்வாறு சொன்னார்.

இன்று காலையில் நஜீப்பின் நண்பர்கள் குறிப்பாக தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஹாஷிம் அப்துல்லா ஒரே சின்னத்தை நாங்கள் பயன்படுத்துவதற்கு அவரிடம் அனுமதியைப் பெற வேண்டும் என கூறுகிறார்.

நான் கெளிங் வார்த்தையை உபயோகிக்க நினைக்கின்றேன். கெளிங் (இந்தியர்கள்) போடா என கூறுவார்கள்.

நாங்கள் ஒரே சின்னத்தைப் பயன்படுத்தக்கூடாது என எந்த சட்டம் கூறுகின்றது? இந்த புதிய சட்டம் இன்று காலையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது என துன் மகாதீர் கூறினார்.

14ஆவது பொதுத்தேர்தல் நெருங்கியுள்ள இவ்வேளையில் துன் மகாதீர் இந்த சொல்லைப் பயன்படுத்தியுள்ளது இந்தியர்களிடையே அதிருப்திகளை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலர் முகநூல், வாட்சாப் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் தங்களது கண்டனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.