மென்செஸ்டர், ஏப்.11-
ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு இங்கிலாந்தின் லிவர்பூல் தகுதிப் பெற்றுள்ளது. ஐந்து முறை ஐரோப்பிய கிண்ணத்தை வென்றுள்ள லிவர்பூல் , செவ்வாய்கிழமை நடந்த இரண்டாவது காலிறுதி ஆட்டத்தில் 2 – 1 என்ற கோல்களில் மென்செஸ்டர் சிட்டியை வீழ்த்தியது.

கடந்த வாரம் அன்பீல்ட் அரங்கில் நடந்த முதல் ஆட்டத்திலும் லிவர்பூல் 3 – 0 என்ற கோல்களில் மென்செஸ்டர் சிட்டியைத் தோற்கடித்தது. இந்நிலையில் இரண்டாவது ஆட்டத்திலும் வெற்றி பெற்ற லிவர்பூல், 5 – 1 என்ற ஒட்டு மொத்த கோல்களில் அரையிறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது. எத்திஹாட் அரங்கில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 2 ஆவது நிமிடத்தில் கப்ரியல் ஜீசஸ், மென்செஸ்டர் சிட்டியின் முதல் கோலை அடித்தார். 40 ஆவது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

அதேவேளையில் லெரோய் சானே அடித்த கோலை நடுவர் ஒப்சைட் காரணமாக நிராகரித்தார். இதன் காரணமாக அதிருப்தி அடைந்த மென்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் குவார்டியோலா நடுவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து குவார்டியோலா ஆடுகளத்தின் அருகில் இருப்பதற்கு நடுவர் தடை விதித்தார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் 56 ஆவது நிமிடத்தில் முஹமட் சாலா போட்ட கோலின் வழி லிவர்பூல் ஆட்டத்தை சமப்படுத்தியது. 13 நிமிடங்களுக்குப் பின்னர் ரோபேர்ட்டோ பிர்மின்ஹோ போட்ட கோல், லிவர்பூலின் வெற்றியை உறுதிச் செய்தது.