லண்டன், ஏப். 15

இவ்வாண்டுக்கான இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை மன்செஸ்டர் சிட்டி வெல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு நடந்த ஆட்டத்தில் டோட்டன்ஹம் அணியை மன்செஸ்டர் சிட்டி சந்தித்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் மன்செஸ்டர் சிட்டி வெற்றி பெறுவது கடினம் என கால்பந்து வல்லுநர்கள் கருத்துரைத்த நிலையில் 1-3 என்ற கோல் எண்ணிக்கையில் மன்செஸ்டர் சிட்டி வென்றது.

ஆட்டம் தொடங்கியது முதல் முழு ஆட்டத்தையும் மன்செஸ்டர் சிட்டி தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. தொடர் தாக்குதல்களை முன்னெடுத்த மன்செஸ்டர் சிட்டி அணிக்கான முதல் கோலை 22ஆவது நிமிடத்தில் கெப்ரியல் ஜீசஸ் புகுத்தினார்.

அடுத்த இரண்டாவது நிமிடத்தில் மன்செஸ்டர் சிட்டி அணிக்கு பெனால்டி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதனை குண்டகென் கோலாகினார். ஆனால் முற்பாதி ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் எஞ்சியிருந்த நிலையில் கிறிஸ்டியன் எரிக்சன் டோட்டன்ஹம் அணிக்கான கோலை புகுத்தினார். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-2 என்ற கோல் எண்ணிக்கையில் முடிவடைந்தது.

பிற்பாதியில் டோட்டன்ஹம் ஆட்டத்தை சமப்படுத்த கடுமையாக போராடுமென கூறப்பட்ட நிலையில் மன்செஸ்டர் சிட்டியின் ஆதிக்கமே தொடர்ந்தது. ஆட்டத்தின் 72ஆவது நிமிடத்தில் ரெஹம் ஸ்டெலிங் புகுத்திய கோலினால் மன்செஸ்டர் சிட்டி 1-3 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் மன்செஸ்டர் சிட்டி 87 புள்ளிகளை பெற்றுள்ளது. இன்று இரவு நடக்கும் ஆட்டத்தில் மன்செஸ்டர் யுனைடெட் தோல்வி கண்டால், பிரிமியர் லீக் கிண்ணத்தை மன்செஸ்டர் சிட்டி வென்றுவிடும்.