சேலம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பொதுச்செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் சேலத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும். இதுகுறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கு ரேசன் கார்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் போது மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கை பொதுமக்களுக்கு பேரிடியாக அமைத்துள்ளது.

குறிப்பாக சமையல் எரிவாயுக்கு கொடுக்கப்பட்ட மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாதத்திற்கு ரூ.4-யை உயர்த்தி வருகிற 2018-ம் ஆண்டு மார்ச் முதல் மானியம் நிறுத்தப்படும் என்று அறிவித்து உள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் நிபந்தனையை ஏற்று மாநில அரசு ஒரு அறிக்கையை தாக்கல் செய்து உள்ளது. அந்த அறிக்கையில் வருடத்திற்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் வருமானம் உள்ளவர்களுக்கு ரேசன் கடையில் பொருட்களை வாங்க மானியம் ரத்து செய்யப்படுகிறது. இதனால் அவர்கள் ரேசன் கடையில் பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்த அறிக்கையால் முறை சாரா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மேலும் 5 ஏக்கர் நிலம் உள்ள விவசாயிகளுக்கு ரேசனில் பொருட்கள் கிடையாது என்ற அறிவிப்பும் வேதனை அளிக்கிறது.

உணவு பாதுகாப்பு துறை அமைச்சர் காமராஜ் அறிக்கை மட்டும் தான் வெளியிட்டுள்ளோம் என்றும் இதனை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்றும் கூறியுள்ளார்.

சமையல் எரிவாயுக்கு மானியம் ரத்து செய்யப்பட்டதையும் ரேசன் பயனாளிகளுக்கு விதித்துள்ள நிபத்தனைகள் குறித்தும் மறுபரீசிலனை செய்ய மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.

தமிழக அரசு மக்கள் பிரச்சனையில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேலும், மத்திய அரசின் கைப்பாவையாக மாநில அரசு செயல்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.