கோலாலம்பூர், ஜூலை 18-
சிலாங்கூர் உலுலங்காட் ஸ்ரீ கோட்டை சங்கிலி கருப்பர் ஐய்யா ஆலயத்தில் எந்த முறை கேடுகளும் நடக்கவில்லை. கொல்லைப் புறமாக நுழைந்து ஆலய நிர்வாகத்தை கைப்பற்றி விட்டோம் என ஒரு தரப்பினர் கூறி வருவது திட்டமிட்ட சதி செயல் என அவ்வாலயத்தின் தலைவர் எம்.சுரேஷ் கூறினார்.
ஆலயத்தை கட்டித் தருவதாக கூறி ஆர்.ஓ.எஸ்.சில் அவர்களுக்கு தெரியாமல் ஆலயத்தை பதிவு செய்துவிட்டோம் என குற்றம் சாட்டியுள்ளார்கள். ஆனால் ஆலய நிர்வாகத்தில் இம்மாதிரியான சிக்கல்கள் எழுந்தது என்பதை ஏன் செய்தியாளர்களிடம் முழுமையாக விளக்கவில்லையென அவர் கேள்வி எழுப்பினார்.
ஒட்டு குடிசையாக இருந்த ஸ்ரீ கோட்டை சங்கிலி கருப்பர் ஆலயத்தை புதுப்பிக்க வேண்டும் என என்னை அணுகினார்கள். முதலில் அதை ஏற்க மறுத்த நான் சங்கிலி கருப்பருக்காக அந்த செயலில் ஈடுபட முடிவு செய்தேன். ஆலயத்தை புதுப்பிக்கும் பணியை தொடங்கும் போது ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் உள்ள எவரும் ஆலயத்தின் கட்டுமானத்திற்கு உதவி புரிய வில்லை.
ஆலயத்தை கட்டும்போது பல்வேறான பிரச்னைகள் எழுந்ததால் அதை விட்டு வெளி வந்துவிட்டு ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் என்னை தேடி வந்து ஆலயத்தை கட்டித் தருமாறு கேட்டார்கள். இங்கே வந்து பார்த்த போது நான் ஆலயத்தை எப்படி விட்டுவிட்டுச் சென்றேனோ அதே நிலையில் பராமரிப்பு இன்றி அந்த ஆலயம் கிடந்தது. ஆலயத்தில் சிலைகளை அமைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
அப்போதும் எனக்கு வேலை வந்ததால் அங்கிருந்து நான் வெளியேறினேன். இத்தருணத்தில் அனுமதி இன்றி ஆலயத்தை கட்டியதால் அதை உடைக்கப்போவதாக ஆர்.ஓ.எஸ். கடிதம் அனுப்பியிருந்தது. 30 நாட்கள் கெடு வழங்கியிருந்த போதும் கடைசி நான்கு நாட்கள் இருக்கும் போது தான் இந்த விஷயம் தமக்கு தெரியவந்ததாக சுரேஷ் கூறினார்.
ஆலயத்தை உனடியாக பதியுங்கள் என இந்த ஆலயத்தின் தோற்றுநர் புவனிடம் எனது தந்தை முருகர் பிள்ளை கேட்டுக் கொண்டபோதும் அவர்கள் அதற்கு செவி சாய்க்கவில்லை. இந்த நிலையில் ஆலயத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் நகராண்மைக்கழக உறுப்பினர்கள் துணையுடன் நான்கு நாட்களுக்குள் ஆலயத்தை பதிவு செய்தோம். இன்று ஆலயம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த ஆலயத்தை விட்டுக்கொடுக்குமாறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
48 புகார்களை செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என கூறுகிறார்கள். உண்மையில் அவர்கள் மேற்கொண்ட ஒவ்வொரு புகாருக்கும் போலீசும், ஆர்.ஓ.எஸ்.சும் எங்களை விசாரித்தது. எங்களின் விளக்கம் தெளிவாக இருந்ததால் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் நாங்கள் தனித்து செயல்படுகிறோம். ஆலயத்தில் பூஜைகள் நடப்பதில்லை என்ற பொய்யான தகவல்களை சில தரப்பினர் பரப்பி வருகின்றார்கள் என்பதையும் அவர் தெரிவித்தார்.
எதற்கும் நான் அஞ்சப் போவதில்லை. என் மீது தவறிருந்தால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும். எந்த தவறும் செய்யவில்லை என்பதால் ஸ்ரீ கோட்டை சங்கிலி கருப்பர் துணையுடன் ஆலயத்தை சிறப்பாக வழிநடத்துவேன். முன்னதாக இந்த ஆலயத்தின் தோற்றுநர் புவன் குடும்பத்தினர் தான் என்பதை நாங்கள் எப்போதும் மறுக்கவில்லை. அதனால்தான் கும்பாபிஷேகத்தின் போது அவர்களுக்கு முதல் மரியாதையை வழங்கினோம். இனியும் தவறான தகவல்களை வெளியிட்டு பொது மக்களை குழப்ப வேண்டாம் என சுரேஷ் கேட்டுக் கொண்டார்.


