கிளானா ஜெயா, ஆக. 25-

மலேசிய கிண்ணப்போட்டிகளில் முதன் முறையாக களம் கண்டுள்ள நமது சமுதாய அணி மிஃபா ஜே.டி.தி மற்றும் கிளந்தான் அணிகளை வெற்றி கொண்டு அதிரடி படைத்தது. அதனையடுத்து கெடா எப்.ஏ அணியுடனான ஆட்டத்தில் அதன் சொந்த அரங்கில் தோல்வியை தழுவியது.

அதனைத்தொடர்ந்து நாளை நமது சொந்த அரங்கில் நடைபெறும் கெடா எப்.ஏ அணிக்கெதிரான ஆட்டத்தில் மிஃபா அணி வெற்றி பெற்று பதிலடி கொடுக்குமா என சமுதாயத்தினர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இந்த ஆட்டம் (26/08/2018) ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் கிளானாஜெயா எம்.பி.பி.ஜே அரங்கத்தில் நடைபெறுகின்றது.

6 புள்ளிகளை பெற்றுள்ள நமது மிஃபா அணிக்கு இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆட்டத்தின் வெற்றியானது நமது அணி காலிறுதியில் நுழைவதற்கு கைகொடுக்கும். சமுதாயத்தினர்களின் ஆதரவும், அவர்களின் பாராட்டும் தொடரும் தருவாயில் விளையாட்டாளர்களுக்கு இன்னும் மிகப்பெரிய உற்சாகத்தை அளிக்குமென மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

எப்பொழுதும் போல் கடுமையான பயிற்சிகளுக்கு மத்தியில் நமது விளையாட்டாளர்களின் தன்னம்பிக்கை அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளது. நமது வீரர்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுவார்கள் என தலைமைப்பயிற்றுநர் கே.தேவன் கூறினார்.

நமது சமுதாய அணிக்கு ஆதரவளிக்க இந்திய பெருமக்கள் திரண்டு வர வேண்டும். நமது அணிக்கு நம்மவர்கள் ஆதரவளிக்காமல் போனால் அது ஆரோக்கியமானதல்ல என அணியின் நிர்வாகி துவான் ஏ.எஸ்.பி ராஜன் கூறினார்.