புதன்கிழமை, மே 27, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > குற்றவியல் > இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்! இந்திய தலைவர்கள் எங்கே?- அரசுசாரா இயக்கங்கள் குற்றச்சாட்டு
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

இந்திய மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம்! இந்திய தலைவர்கள் எங்கே?- அரசுசாரா இயக்கங்கள் குற்றச்சாட்டு

செராஸ், ஆக. 26-

தலைநகரில் உள்ள செராஸ் என்எஸ்கே பேரங்காடியில் கடந்த மே மாதம் 25ஆம் தேதி கத்தியை எடுத்ததற்காக பாதுகாவலர்களால் இரு இந்திய சிறுவர்கள் தாக்கப்பட்டனர். பின்னர் 30 பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் அவர்களை மிரட்டினர் என்ற செய்தி தொடர்ந்து சமூக தளங்களிலும் பத்திரிகைகளிலும் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு காண இதுவரையில் எந்த இந்திய தலைவர்களும் எங்களை அணுகவில்லை என ஒன்றுபட்ட இந்திய சமூக இயக்கத்தை சேர்ந்த உமா காந்தன் குற்றம் சாட்டினார்.

இந்த விவகாரத்தை உடனடியாக தீர்த்து வைப்பதாகக் கூறிய பத்து நாடாளுமன்ற உறுப்பினரான பிரபாகரனும் மெத்தன போக்குடன் நடந்து கொள்வது வருத்தம் அளிப்பதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

பின்னர் தர்ஷன் கணேசன் (வயது 12) அவரது அண்ணன் கார்த்திக் ஷாண் (வயது 15) ஆகிய இருவரும் 6 நாட்கள் போலீஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இது மனித உரிமைக்கு எதிரான செயல்.

பேரங்காடியில் பொருட்கள் திருடப்பட்டால், அது குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டும். யாரையும் அடிப்பதற்கு இங்கு எவருக்கும் உரிமையில்லை. முன்னதாக தர்ஷனை 4 பேர் தாக்கியுள்ளார்கள். அவர் அங்கிருந்து ஓடிவிட அவரை தேடிச் சென்று, அவரது வீட்டில் இருந்த அண்ணனையும் கேட்டுக்கு வெளியே இழுத்து வந்து அடித்துள்ளார்கள்.

பிரச்னையை தீர்த்து வைப்பதாகக் கூறி, இந்த சிறுவர்களை கைது செய்து 6 நாட்கள் போலீஸ் காவலில் தடுத்து வைத்துள்ளார்கள். சிறுவர்களை கைது செய்தால் அவர்களுக்கான சிறையில்தான் அடைக்க வேண்டும். ஆனால் பொதுவான சிறையில் மற்ற கைதிகளுடன் இந்த இருவரும் இருந்துள்ளார்கள். அங்கு அவர்கள் பகடிவதை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த இரண்டு சிறுவர்களையும் தாக்கும் போது, இனவாதமான வார்த்தைகளையும் அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.

இந்த சம்பவத்தை எப்படி அணுக வேண்டுமென இவர்களுக்கு தெரியவில்லை. அதனால் போலீஸ் புகாரை இவர்கள் மேற்கொள்ளவில்லை. இந்த விவகாரத்தை இப்படியே விட்டுவிடக்கூடாது என்பதற்காக இப்போது இந்த சம்பவம் தொடர்பில் 3 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டிருந்தது. இதன் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டு, அடுத்த நாளே வெளியேறிவிட்டார்கள். ஆனால் இந்த சிறுவர்கள் 6 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்கள். இது எந்த வகையில் நியாயமென அவர் கேள்வி எழுப்பினார்.

இந்த சிறுவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலின் காரணமாக கடந்த 2 மாதங்களாக பள்ளிக்கூடத்திற்கூட செல்லவில்லை. இவர்களுக்கு எப்போதுதான் நியாயம் கிடைக்குமென்று அவர் வினவினார். இப்படி சமுதாய இளைஞர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது எந்தவொரு இந்திய தலைவரும் இப்பிரச்னையை தீர்க்க முன்வரவில்லை.

தேர்தல் சமயத்தில் எங்களின் ஆதரவு தேவை என்பதால் உடனடியாகப் பதிலளித்தார்கள். ஆனால் இப்போது எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை. குறிப்பாக உதவுவதாகக் கூறி முன்வந்த பிரபாகரனும் இதுவரையில் எந்தப் பதிலும் தரவில்லை. பாதிக்கப்பட்ட மாணவர்களை நேரடியாக வீட்டிற்கே சென்று சந்தித்த அவர், அதன் பின் மாயமாகிவிட்டார். இந்த மாணவர்கள் தாக்கப்பட்டது தொடர்பிலும் மிரட்டப்பட்டது தொடர்பிலும் உடனடி பதில் தேவை. அப்போதுதான் இவர்கள் இருவரும் மீண்டும் பள்ளிக்கூடத்திற்கு சென்று தங்களின் கல்வியை தொடர முடியுமென உமா காந்தன் கூறினார்.

மன ஆதங்கத்தை வெளிப்படுத்த இன்று ஒன்று கூடினோம். எங்களுக்கான பிரச்னையை தீர்க்க எவரும் முன்வராத பட்சத்தில் இந்த விவகாரம் சமுதாய தலைவர்களுக்கு எதிரான போராட்டமாகவும் மாற அதிகம் வாய்ப்புள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

சமூக இயக்கங்களை சேர்ந்த பிடி கானா, தினேஷ் செல்வராஜூ, சிவநேசன், பூவன் ஆகியோர் இந்த விவகாரங்களுக்கு முழுமையான ஆதரவு தெரிவிப்பதாக உறுதியளித்தார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன