வியாழக்கிழமை, ஜூன் 20, 2019
அண்மையச் செய்திகள்
முகப்பு > அரசியல் > நாடற்ற இந்தியர்கள் எண்ணிக்கை 3853 தானா? பொய்யுரைக்காதீர் பேராசிரியர் ராமசாமி காட்டம்!
அரசியல்சமூகம்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

நாடற்ற இந்தியர்கள் எண்ணிக்கை 3853 தானா? பொய்யுரைக்காதீர் பேராசிரியர் ராமசாமி காட்டம்!

கோலாலம்பூர், ஆக. 28-

நாடற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 3 லட்சம் அல்ல. அது வெறும் 3853 பேர் மட்டுமே என உள்துறை துணையமைச்சர் டத்தோ முகமட் அஸிஸ் பின் ஜாமான் கூறியிருப்பது பொய்யான தகவல் என பினாங்கு மாநில 2ஆம் முதல்வர் பேராசிரியர் ராமசாமி தெரிவித்தார்.

உள்துறையில் பதிவு பெற்றுள்ள குடியுரிமை இல்லாத இந்தியர்களின் எண்ணிக்கையை மட்டுமே அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மாறாக இன்னமும் பல்லாயிரம் பேர் குடியுரிமையின்றி மலேசியாவில் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

முன்னதாக 2013ஆம் ஆண்டு பினாங்கு மாநிலத்தில் மட்டும் குடியுரிமை இல்லாத இந்தியர்களை பதிவு செய்ய ஒரு இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் குடியுரிமை இல்லாத 1,000 இந்தியர்களின் ஆவணங்களை திரட்டி உள்துறை அமைச்சிடம் ஒப்படைத்தோம். அதில் 50 பேருக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்பட்டது.

ஆவண விவகாரம் தொடர்பில் உள்ள சட்ட சிக்கல்களை தளர்வு செய்தால் மட்டுமே பெரும்பாலான இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் என்பதையும் அவர் நினைவுறுத்தினார். நம்பிக்கை கூட்டணி தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டதை போல இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவது மிக முக்கியமான ஒன்று. அந்த எண்ணிக்கை 3,000தான் என்பது தவறான செய்தி.

பலரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. சட்ட சிக்கல்களும் மேலோங்கியுள்ளது. அதில் தளர்வை ஏற்படுத்தினால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியும். அண்மையில் பிரதமர் துன் மகாதீருடன் 45 நிமிடங்கள் நடந்த சந்திப்பில் இந்தியர்களின் குடியுரிமை பற்றி மட்டுமே பேசப்பட்டது. 3 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை இல்லை என்பது தவறான கணிப்பு என்றாலும் 3,000 இந்தியர்கள் மட்டுமே குடியுரிமை இல்லாமல் இருக்கிறார்கள் என குறிப்பிடுவது அதை விட தவறானது என்பதை பேராசிரியர் ராமசாமி சுட்டிக் காட்டினார்.

ஆவணப் பிரச்னைகளை களைவதற்கு உடனடி நடவடிக்கை அவசியம் என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார். இந்தியர்களின் விவகாரங்கள் குறித்து எந்த அமைச்சரை நாடுவது என்ற கேள்வி எழும் நிலையில் இன்னும் ஓர் ஆண்டு காலத்தில் நம்பிக்கை கூட்டணியின் நிர்வாகத்தில் அனைத்தும் முறைப்படுத்தப்படும். அதற்கு மக்கள் வாய்ப்பு வழங்க வேண்டும் என பேராசிரியர் ராமசாமி கேட்டுக் கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன