கோலாலம்பூர், செப். 2-

ஒரே மலேசியா கிளினிக்குகளில் 33 கிளினிக்குகள் கட்டம் கட்டமாக மூடப்படும் நிலையில், மீதமுள்ள 313 ஒரே மலேசியா கிளினிக்குகள் சமூக கிளினிக் என பெயர் மாற்றம் காணுமென்று சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்ளி அமாட் கூறியுள்ளார்.

அந்த 33 கிளினிக்குகள் கட்டம் கட்டமாக மூடப்படும். குறிப்பாக இந்த கிளினிக்குகள் மூடப்படுவதால் பொது மக்களுக்கு எந்த வகையிலும் பாதிப்பு வராது என்றார் அவர். மூடப்படும் இந்த 33 கிளினிக்குகளுக்கு அருகாமையில் அரசு மருத்துவமனைகளும் சுகாதார கிளினிக்குகளும் உள்ளன என்று தேசிய நிலையிலான பல் பாதுகாப்பு வாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பெயர் மாற்றம் காணப்படும் சமூக கிளினிக்குகளில் ஒரு சுகாதார அதிகாரி, மருந்தாளுனர் (pharmaceutist) உட்பட சில தாதிகளும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றார் அவர். இந்த விவகாரம் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டதாகவும் டாக்டர் சுல்கிப்ளி தெரிவித்தார்.

முன்னதாக 2010ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஒரே மலேசியா கிளினிக் திட்டத்தை தொடங்கினார். அதன் மூலம் தற்போது நாட்டில் 346 ஒரே மலேசியா கிளினிக்குகள் செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.