மாட்ரிட், மார்ச்.5-
ஸ்பெயினின் ரியல் மாட்ரிட் கால்பந்து கிளப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப தகுதியான ஆட்டக்காரர் அடையாளம் காணப்படவில்லை என மத்திய திடல் ஆட்டக்காரர் லுக்கா மொட்ரிச் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு எல் கிலாசிக்கோ ஆட்டங்களில் ரியல் மாட்ரிட், தனது பரம வைரியான பார்சிலோனாவிடம் தோல்வி கண்டது.
இந்த இரண்டு ஆட்டங்களிலும் ரியல் மாட்ரிட் கோல் போடத் தவறியுள்ளது. ஸ்பெயின் லா லீகா போட்டியிலும் ரியல் மாட்ரிட், பார்சிலோனாவைக் காட்டிலும் 12 புள்ளிகளில் பின் தங்கியுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய வெற்றியாளர் லீக் கிண்ணத்தை ( சாம்பியன்ஸ் லீக் ) மட்டுமே ரியல் மாட்ரிட் நம்பியுள்ளது.
இன்று பின்னிரவு நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் லீக் கிண்ணப் போட்டியின் இரண்டாவது சுற்றில் ரியல் மாட்ரிட், நெதர்லாந்தின் ஆயக்ஸ் ஆம்ஸ்டர்டம் அணியை எதிர்கொள்ளவிருக்கிறது. இந்த ஆட்டத்தை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்த மொட்ரிச் , ரொனால்டோ குறித்து தனது கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ரொனால்டோ, இத்தாலியின் யுவன்டசில் இணைய முடிவெடுத்தப் பின்னர் ரியல் மாட்ரிட், இளம் ஆட்டக்காரர்களான வினிசியஸ் ஜூனியர், மரியானோ டியாசை ஒப்பந்தம் செய்தது. இருப்பினும் அவர்களால் ரொனால்டோ இடத்தை நிரப்ப முடியவில்லை.
அனுபவமிக்க ஆட்டக்காரர்களான கேரத் பேலும், கரீம் பென்சீமாவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திணறி வருகின்றனர். ஒரு பருவத்தில் ரொனால்டோ, 50 கோல்களைப் போட்டிருக்கிறார். அதே போன்ற ஆட்டக்காரரை ரியல் மாட்ரிட்டினால் உருவாக்க முடியவில்லை என மொட்ரிச் தெரிவித்தார்.


