கோலாலம்பூர், மார்ச். 5 –
மலேசிய இந்தியர் காங்கிரசின் ( ம.இ.கா. ) தலைமை செயலாளர் பதவியிலிருந்து டத்தோ ஸ்ரீ வேள்பாரி விலகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் இடம்பெற்றுள்ள வாட்ஸாப் புலனத்தில் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதற்கான உறுதி கடிதத்தை தலைமைத்துவத்தில் வழங்கியிருப்பதாக டத்தோஸ்ரீ வேள்பாரி கூறியிருக்கின்றார்.
மத்திய செயலவை கூட்டத்தில் அவரது கடிதம் ஏற்றுக் கொள்ளப் படுமா அல்லது மறு ஆய்வு செய்யப்படுமா என்பது குறித்து அக்கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் முடிவு செய்யப்படவுள்ளது. இந்நிலையில் அக் கட்சியின் தலைமைச் செயலாளராக நீடிக்கப் போவதில்லை என்பதில் டத்தோஸ்ரீ வேள்பாரி உறுதியாக இருக்கின்றார்.
மைக்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் விவகாரம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப் படுகின்றது. அண்மையில் அக்கட்சியின் மத்திய செயலவை கூட்டத்தில் இதுகுறித்து புனிதன் கேள்வி எழுப்பியிருந்தார். தம் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படும் நிலையில் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து விலகுவதாக அன்றே டத்தோஸ்ரீ வேள்பாரி அறிவித்திருந்தார்.
ஆனால் கட்சித் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்விவகாரத்தை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி அப்பிரச்சினைக்கு அப்போது தீர்வு கண்டார். இந்நிலையில் மைக்கா ஹோல்டிங்ஸ் விவகாரம் இதர சமூக தளங்களிலும் நாளிதழ்களிலும் முதன்மைச் செய்தியாக வெளிவந்துள்ள நிலையில் இனியும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை செயலாளராக நீடிக்க விரும்பவில்லை என்பதை வேள்பாரி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வேள்பாரி தலைமை செயலாளர் பதவியில் இருந்து விலகும் நிலையில் அப் பொறுப்பிற்கு யார் அமர்த்தப்படுவார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த அக்கட்சியின் மத்திய செயலவைத் தேர்தலில் முதல் 5 இடங்களை பிடித்த வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. ஆக செயலாளராக இருக்கும் டத்தோ அசோகன் தற்போது தலைமைச் செயலாளர் பதவியை கவனித்து வருகிறார்


