கோலாலம்பூர், ஜூலை 25-
மலேசிய இந்திய குத்தகையாளர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் தங்களின் காலகட்டத்தில் இருந்த எவ்வித கோப்புகளையும் ஆவணங்களையும் நடப்பு நிர்வாகத்திடம் கொடுக்காமல் போனால் சங்கத்தை எப்படி நாங்கள் சுமூகமாக வழிநடத்துவது என அதன் தலைவர் டத்தோஸ்ரீ சுகுமார் கேள்வி எழுப்பினார்.
சங்கத்தின் கணக்கறிக்கை, செடிக் மானிய செலவினங்களுக்கான கணக்கறிக்கை, கூட்டக் குறிப்பு, வங்கி கணக்கு விவரங்கள் என எதுவுமே நாங்கள் நிர்வாகத்தில் அமர்ந்த பின்னர் எங்களிடம் காட்டப்படவில்லை எனவும் அவர் புகார் தெரிவித்தார்.
இந்த ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்குமாறு முந்தைய நிர்வாகத்திற்கு கடந்த வாரத்தில் 7 நாள் அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித பதிலும் கிடைக்கவில்லை. கடந்த திங்கள்கிழமையோடு அந்த கெடுவும் முடிந்த பட்சத்தில் நேற்று முன்தினம் செந்தூல் மாவட்ட போலீஸ் நிலையத்தில் இது தொடர்பில் புகார் செய்தோம்.

அடுத்தகட்டமாக இந்த போலீஸ் புகாரை இணைத்து நாங்கள் மித்ராவிற்கு கடிதம் அனுப்பவுள்ளோம். சங்கத்திற்கு அரசு வழங்கிய மானியங்கள் தொடர்பிலும் அதன் செலவினங்கள் பற்றிய எந்த தகவலும் எங்களுக்கு கிடைத்தப்பாடில்லை. முன்னாள் நிர்வாகம் தான் எங்களுக்கு இதன் தொடர்பில் ஆவணங்களை வழங்க வேண்டும். ஆனால் அதில் இருந்தவர்கள் தங்களின் முறையான கடமையைச் செய்யத் தவறியதால் நாங்கள் இதன் தொடர்பில் மித்ராவிற்கு கடிதம் அனுப்பவுள்ளோம் என்றார் அவர்.
மேலும் அவர்கள் தரப்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மற்றும் எங்கள் தரப்பு வழக்கறிஞர் மூலம்தான் நடந்து முடிந்த தேர்தலை நடத்த நிர்வாக செயலவை நியமிக்கப்பட்டது. ஆனால் இன்று அதிலும் அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
மேலும் செடிக் வழங்கிய மானியம் தொடர்பிலான விவரங்களை சேகரிக்க ராணி தலைமையிலான பணிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சங்க உறுப்பினர்களான ஆனந்தன், மோகன் செல்லையா. தமிழ்ச்செல்வம் உள்ளிட்ட ஐவர் உள்ளனர். இனி அவர்கள் இந்த மானியம் எவ்வாறு செலவிடப்பட்டது? யாருக்கு கொடுக்கப்பட்டது? யார் கணக்கில் எவ்வளவு பணம் சேர்க்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் தகவல்களை சேகரிப்பார்கள்.
கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற சங்கக் கூட்டத்தில் சங்கத்தின் ஆலோசகராக டத்தோஸ்ரீ கந்தசாமி மத்திய செயலவையினரால் ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில் சங்கம் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றி எனக்குத் தெரியும். ஆனால் இன்று அதற்கு தீர்வு கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகையால் முந்தைய நிர்வாகத்தினர் நிர்வாக ஆவணங்களை முறையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அனைவரும் ஒற்றுமையாக சங்கத்தை வழிநடத்த வேண்டும் என்றும் ஆலோசனை கூறினார்.


