Homeஅரசியல்பிச்சை எடுக்குமாம் பெருமாள் அதை பிடுங்கி.... அரசாங்கத்தை விமர்சித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

பிச்சை எடுக்குமாம் பெருமாள் அதை பிடுங்கி…. அரசாங்கத்தை விமர்சித்த டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் ஜூலை 27-

தேசிய முன்னணி அரசாங்கம் இந்நாட்டு மக்களுக்காக முன்னெடுத்த செயல்திட்டங்களை பெயர் மாற்றம் செய்து அதன் மூலம் மட்டுமே அரசியல் லாபம் தேடி வருகின்றது நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் என மலேசிய இந்திய காங்கிரசின் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.வி. விக்னேஸ்வரன் வன்மையாகச் சாடினார்.

பிச்சை எடுக்கும் பெருமாள் அதை பிடுங்கி தின்னுமாம் அனுமான் எனும் கதைக்கு ஏற்ப தேசிய முன்னணி தொடங்கிய அத்தனை திட்டங்களையும் பெயர் மாற்றம் செய்து தற்போது அதனை செயல்படுத்தி இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார்.மலேசிய இந்திய காங்கிரசின் மாதர், இளைஞர், புத்ரா, புத்ரி  ஆண்டு கூட்டத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வசதி குறைந்த மக்களுக்காக பிரீம் திட்டத்தை தேசிய முன்னணி தொடர்ந்து செயல்படுத்தி வந்தது. தற்போது அத்திட்டத்தை பெயர் மாற்றி மீண்டும் அமலாக்கம் செய்து வருகின்றார்கள். இந்தியர்களின் சொத்துடைமையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் செடிக் தொடங்கப்பட்டது. இப்போது அதனை மித்ரா என பெயர் மாற்றம் செய்து பிரதமர் துறை அமைச்சின் கீழ் செயல்படுத்தி வருகிறார்கள். அதேபோல் புதிதாக தமிழ்ப்பள்ளிகளை கட்ட வேண்டும் என்ற நடவடிக்கையை தேசிய முன்னணி தான் முன்னெடுத்தது. இப்பொழுது அந்த தமிழ்ப்பள்ளிகளை திறந்து இவர்கள் பெயர் சூட்டு விழா நடத்தி வருகிறார்கள் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறிய போது அரங்கமே சிரிப்பொலியில் அதிர்ந்தது.

கடந்த கால ஆட்சியில் மலேசிய இந்திய காங்கிரஸ் மிகப் பெரிய பண மோசடியில் ஈடுபட்டது. இவர்கள் அனைவரும் மக்கள் பணத்தை திருடி விட்டார்கள் என தொடர்ந்து குற்றம் சாட்டினார்கள். அரசாங்கம் கைமாறிய பிறகும்ம் இன்று வரையில் மஇகா மீது உங்களால் எந்த குற்றச்சாட்டையும் நிரூபிக்க முடியவில்லை. நாங்கள் எந்த தவறும் செய்யாத காரணத்தினால் எங்கள் நடவடிக்கைகள் எப்பொழுதும் வெளிப்படையாகவே இருக்கும். அதனால் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை என அவர் தெரிவித்தார்.

பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆளும் கட்சியில் உள்ள சிலர் குறை கூறி வருகிறார்கள். இத்தனை ஆண்டு காலமாக நீங்கள் எதிரியாக பார்த்த துன் மகாதீரை பிரதமராக ஏற்றுக்கொண்டு பணியாற்ற நீங்கள் தயாராக இருக்கும் போது பாஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதில் எங்களுக்கு எந்த பாதகமும் இல்லை என அவர் கூறினார்.

பாஸ் ஒரு சமய ரீதியிலான கட்சி என்ற சித்தாந்தம் அக்கட்சியின் மீது புகுத்தப்பட்டதே தவிர அவர்கள் திறந்த மனதோடு அனைத்து சமூகத்தினரையும் அரவணைக்க வேண்டும் என்ற சிந்தனையில் செயல்படுகிறார்கள். இதுவரையில் கிளாந்தான், திரங்கானு மாநிலங்களில் எந்த இந்து ஆலயமும் உடைக்கப்படவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இக்காலச் சூழ்நிலையில் அரசியல் மாற்றம் என்பது தானாக நிகழும். ஆனால் இளைஞர்கள் 18 வயது தொடங்கி வாக்களிக்கலாம் என்ற சூழ்நிலை இப்போது நிலவும் பொழுது இளைஞர்களுக்கு நடப்பு அரசாங்கத்தின் செயல்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்னோவுடன் பாஸ் இணைந்து பணியாற்றும் வேளையில் அதில் மஇகாவும் இணைவதால் அனைத்து ரீதியிலும் இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும். இதுவே மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது உரையில் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more