கோலாலம்பூர், டிசம்பர் 4-

எஸ்.ஆர்.சி அனைத்துலக நிதி நிறுவனத்திற்கு சொந்தமான வெ.4 கோடி 20 லட்சம் பணத்தில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் முறைகேடு புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை  கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் நடந்தது.

தாம் பிரதமராக இருந்தபோது எஸ்.ஆர்.சிக்கு சொந்தமான பணத்தை சொந்த நலனிற்கு பயன்படுத்தியதில்லை என்று டத்தோஸ்ரீ நஜிப் கூறியிருக்கிறார்.

“பதவியில் இருந்தபோது ஒரு பிரதமராகவும் நிதியமைச்சராகவும் நாட்டின் நலனுக்காக செயல்படுவது எனது கடமையாகும். தனிப்பட்ட முறையில் சொந்த தேவைக்காக செயல்பட்டதில்லை’’ என்றார் அவர்.

வழக்கறிஞரின் முதல்கட்ட குறுக்கு விசாரணையில், நஜீப் தம் மீது சுமத்தப்பட்ட குற்றங்களை மறுத்திருக்கிறார்.

தாம் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பாகவே இயக்குநர் வாரிய குழுவிற்கு நஜிப் அறிவிப்புகளை வழங்கியதாக எஸ்ஆர்சியின் முன்னாள் தலைவர் டான்ஸ்ரீ இஸ்மி இஸ்மையில் குற்றம் சாட்டியிருந்தார். இது குறித்து நஜிப் கூறுகையில், டான்ஸ்ரீ இஸ்மியில் குற்றச்சாட்டு தம்மை அதிர்ச்சியடைய செய்ததாகவும் நிறுவனம் தொடர்பான அனைத்து விஷயங்களும் வாரியத்தின் பொறுப்பாகும் என்று அவர் கூறினார்.

இயக்குநர் வாரிய குழுவிற்கு அறிவிப்புகளை வழங்கியது தொடர்பில் தாம் எந்தவொரு ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை என்று நஜிப் தெரிவித்தார்.

எஸ்ஆர்சி நிறுவன பணமோசடி உட்பட நஜீப் மீது சில குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன. காலை 9.30 மணிக்கு விசாரணை தொடங்கி மாலை 5 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் விசாரணை தொடரும்.

மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் டத்தோஸ்ரீ நஜிப்பிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இன்று நடந்த தற்காப்பு வாதத்தில் கலந்து கொண்டார்.