Homeமலேசியாடிக்கெட் விற்பனையில் எப்.ஏ.எம் சம்பந்தப்படவில்லை - டத்தோ ஹமிடின்

டிக்கெட் விற்பனையில் எப்.ஏ.எம் சம்பந்தப்படவில்லை – டத்தோ ஹமிடின்

கோலாலம்பூர் , ஆக.29 – 

2017 சீ விளையாட்டுப் போட்டியில் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கான டிக்கெட் விற்பனையில் எப்.ஏ.எம் எனப்படும் மலேசிய கால்பந்து சங்கம் சம்பந்தப்படவில்லை என அதன் தலைமைச் செயலாளர் டத்தோ ஹமிடின் முஹமட் அமின் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் மலேசிய கால்பந்து கூட்டு ஒத்துழைப்பு நிறுவனத்துக்கும் தொடர்பில்லை என அவர் விளக்கம் அளித்துள்ளார். சீ விளையாட்டுப் போட்டி தொடர்பான அனைத்து விவகாரங்களை மாசோக் எனப்படும் மலேசிய ஏற்பாட்டுக் குழு கவனித்து வந்ததாக அவர் கூறினார்.

சீ போட்டியின் கால்பந்து இறுதி ஆட்டத்தின் டிக்கெட் விற்பனையில் ஏற்பட்ட குளறுபடிகளுக்கு சில தரப்பினர் இன்னமும் எப்.ஏ.எம்-ம்மை குறைக் கூறுவது தமக்கு வருத்தத்தை அளிப்பதாக ஹமிடின் தெரிவித்தார்.

மலேசியா – தாய்லாந்து அணிகளுக்கு இன்றிரவு நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்துக்கான டிக்கெட்டுகள் திங்கட்கிழமை காலை 11 மணி தொடங்கி ஷா ஆலாம் அரங்கில் விற்கப்பட்டன.

இந்த டிக்கெட்டுகளை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பெரும்பாலான ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமை இரவு முதலே ஷா ஆலாம் அரங்கில் திரண்டிருந்தனர்.

எனினும் திங்கட்கிழமை மதியத்துக்குள் டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக ஷா ஆலாம் அரங்கில் அறிவிக்கப்பட்டதை அடுத்து ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

இதனால் ஷா ஆலாம் அரங்கின் டிக்கெட் விற்பனை முகப்புகளில் ரசிகர்களுக்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டது.

இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தை புறக்கணிப்பதாக அல்ட்ராஸ் மலாயா எனப்படும் மலேசிய கால்பந்து ரசிகர்கள் குழு அறிவித்துள்ளது.

 

spot_img

latest articles

explore more