ஈப்போ, செப். 20-

ஈப்போவிலுள்ள எங்கள் மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டடப் பணிகள் நிறைவுற்று, சில மாத காலங்களாய் போதனைகள் யாவும் புதிய கட்டடத்தில் தான் நடக்கின்றன. இந்நிலையில் பள்ளிக்கு அருகிலுள்ள சிறிய காட்டுப் பகுதியிலிருந்து பாம்புகள், உடும்புகள், காட்டுப்பன்றிகள் போன்ற விலங்குகள் பள்ளி வளாகத்தில் அடிக்கடி தென்படுகின்றன என்ற தகவலை, அவற்றின் படங்களுடன் திரு.அருண் (முன்னாள் மாணவர் கழக தலைவர்) கழகத்தின் செயலவை புலன குழுவில் பதிவிட்டார். அவைவரும் அதிர்ந்து போனோம். மாணவர்களின் நலன் கருதி தீவிரமாக உரையாடினோம்.

இது ஓர் அபாயகரமான நிலை என்பதை உணர்ந்து ‘மலேசிய தின’ பொது விடுமுறை தினத்தில் (16/9/2020) கூட்டுப்பணி (Gotong Royong) ஒன்றினை ஏற்பாடு செய்ய முடிவெடுத்தோம். கூட்டுப்பணி ஏற்பாட்டினை உறுப்பினர்களுக்கு தெரிவிக்க ஒரு பதாகையை வடிவமைத்து அதனுடன் ஒரு குரல் பதிவையும் இணைத்து கழகத்தின் பிரதான குழுவில் அறிவித்தோம். சக உறுப்பினர்களும் விரைந்து ஒத்துழைப்பு வழங்க முன் வந்து பெயர் பதிவுகளை சிறப்பாக தொடங்கினர்.

நிற்க; நான் இப்பள்ளியில் பயின்றதோடு மட்டுமின்றி எங்கள் குடும்பம் பள்ளிக்கு மிக பக்கத்தில் தான் சில ஆண்டுகாலங்களாய் வாழ்ந்துள்ளோம். கம்பத்தில் உடும்புகளையும் பாம்புகளையும் பார்த்த அனுபவங்கள் நிறையவே உண்டு. இருப்பினும் காட்டுப்பன்றிகள் இவ்வளாகத்தில் திரிகின்றன என்ற தகவல் சற்று ஆச்சிரியம் கலந்த அச்சத்தை எனக்குள் குவித்தது. கூட்டுப்பணியைப் பற்றிய ஞாபகம் வரும்போதெல்லாம் காட்டுப்பன்றி உருவங்கள் தான் மனதில் நிழலாடின. மிருக காட்சி சாலையில் பிணங்கள் போல உறங்கிக் கொண்டிருக்கும் காட்டுப்பன்றிகள், ‘லாயன் கிங்’ (Lion King) கதையில் வரும் கோமாளி காட்டுப்பன்றி, எழுத்தாழர் ம.நவீனின் ‘பேச்சி’ கதையில் வரும் உக்கிரமான காட்டுப்பன்றி என ஒரே காட்டுப்பன்றி எண்ணங்கள் தான் சில தினங்களாய்.

இது காட்டை சுத்தம் செய்வதற்கான கூட்டுப்பணி என இல்லாமல் காட்டுப்பன்றிகளுக்கு எதிரான போர் முழக்கம் போல ஓர் உணர்வு எனக்குள் ஊடுருவியது. கனவுகளில் கூட காட்டுப்பன்றிகள் வந்து போயின. தனிமையாக காரில் பயணிக்கும் போது திடீரென காரின் பின் இருக்கையிலிருந்து ஒரு காட்டுப்பன்றி எட்டிப்பார்ப்பதாய் ஒரு கனவு. மலைப்பகுதியில் நான் தியானத்தில் இருக்கையில் கூட்டமாய் சில காட்டுப்பன்றிகள் கூச்சலிட்டு ஓடி வருவது போல மற்றுமொரு கனவு என இரண்டும் திடுக்கிட வைத்தன. ‘நமது நினைவுகளுக்கு ஒப்பவே நமக்கு கனவுகள் வரும்’ என யாரோ எப்போதோ சொன்ன வார்த்தைகள் நிஜமாக நிகழ்ந்தன.

காட்டுப்பன்றிகளுக்கு நாங்கள் நடத்தும் கூட்டுப்பணி பற்றிய தகவல் தெரிய வந்தால் அவை எப்படி சிந்திக்கும்? என்னவெல்லாம் பேசிக்கொள்ளும்? என்றெல்லாம் கூட சிந்திக்க தொடங்கினேன். அது போல் பேசியும் பார்த்தேன். அச்சத்திலிருந்து மீள்வதற்கு தமாசாக காட்டுபன்றி, உடும்பு மற்றும் பாம்பு உரையாடிக்கொள்வது போல பலகுரல் பதிவொன்றைச் செய்து குழுவில் பதிவிட்டேன். அதனையொட்டி மற்ற உறுப்பினர்களின் கருத்துகள் சற்று உற்சாகம் அளித்தன.

மலேசிய தினத்தன்று சரியான நேரத்தில் பள்ளியை சென்றடைந்தேன். இன்னும் யாருமே வந்து சேராதது போல பள்ளி அமைதியாக இருந்ததால் வாசலிலேயே காரை நிறுத்திவிட்டு காத்திருந்தேன். என் சக வகுப்பில் பயின்ற தோழர்கள் குமரப்பாண்டியனும் லோகநாதனும் அடுத்தடுத்து வந்து சேர்ந்தனர். மூவரும் என் காரில் அமர்ந்துகொண்டு சில நிமிடங்கள் ஜாலியாக பேசிக்கொண்டிருந்தோம்.

கூட்டுப்பணியில் பங்கெடுக்கும் உறுப்பினர்களுக்காக காலை சிற்றுண்டியை நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர் திரு.நசீர் அவர்கள் தனது உணவகத்திலிருந்து “எல்லாம் தயாராகி விட்டது வந்து எடுத்துக் கொள்ளுங்கள்” என அழைத்துச் சொன்னது சற்று நல்லதாக பட்டது. நாங்கள் மூவரும் அப்படியே பேச்சை தொடர்ந்த வண்ணம் சென்று சிற்றுண்டியை கொண்டு வந்தோம்.

அதற்குள் சுமார் 20 முதல் 30 உறுப்பினர்கள் கூடி பணியை தொடங்கியிருந்தனர். ஆளுக்கொரு பணியில் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். எங்கள் பள்ளியின் சாதனை முத்துக்களில் ஒருவராக திகழும் முனைவர் ரஹீம் முன்னா அவர்கள் அன்பளிப்பு செய்திருந்த பாதுகாப்பு கவசங்களை அணிந்துக்கொண்டு நீண்ட அரிவாள்களுடன் களத்தில் இறங்க தயாரானோம். நாங்கள் அழிக்கவிருக்கும் காட்டை நோக்கி நடக்கையில் திடீரென காட்டுப்பன்றிகள் தாக்குவதற்காக இறங்கி வேகமாய் வந்தால் எங்கே ஓடி ஒளிந்து கொள்வது? என இடம் பார்த்து வைக்கத் தோன்றியது.

உயரமான நீல நிற நீர்த் தொட்டியும் அதற்கான ஏணிப்படியும் தென்பட்டது. அதுவே சிறந்த பாதுகாப்பான இடமென முடிவெடுத்தேன். என்னுள் இருந்த அச்ச உணர்வு என் கண்களின் வழி பிறருக்கு தெரிந்து விட கூடாது என எதற்கும் ஒரு கருப்பு கண்ணாடியை அணிந்து கொண்டேன்.

காட்டிலிருந்து சுமார் 100 அடி தூரத்தில் நகராட்சி மன்ற கனவூர்திகள் இரண்டு கம்பீரமாய் நின்றன. அம்மன்றத்தில் ஊழியர்கள் ஐந்து ஆறு பேர் தென்பட்டனர். முன்னாள் மாணவர் கழக தலைவர் திரு.அருணும் செயளாலர் திரு.தமிழரசனும் புல் வெட்டும் இயந்திரங்கள் ஏந்தி காட்டுச்செடிகளை வெட்டி வீசிக்கொண்டிருந்தனர், கழக துணைத்தலைவி சகோதரி ஹேமாவதி, சக கழக உறுப்பினர்கள், பள்ளி மேலாளர் வாரிய தலைவர் திரு.புண்ணியமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சிலர், முன்னாள் ஆசிரியை திருமதி.நேசம் என பலரும் வந்திருந்தனர். எல்லாம் பரிச்சியமான முகங்கள்…இணைந்து அளுக்கொரு பொறுப்பில் காட்டை தகர்த்துக்கொண்டிருந்தனர்.

அனைவருக்கும் மத்தியில் குட்டியாய் ஒரு பாப்பா, வெட்டி சாய்க்கப்பட்ட செடிகளை அள்ளிக்கொண்டு குடுகுடுவென கனவூர்திக்கும் அங்கிருந்து மீண்டும் மின்னல் வேகமாய் காட்டுப்பகுதிக்கும் சுழன்றுக் கொண்டிருந்தார். அருகில் சென்று “யாருமா நீ? முன்னாள் மாணவியா?” என தயக்கத்துடன் கேட்டேன். “இல்ல அங்கிள் நான் தனிஷா. இந்த பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் படிக்கிறேன்” என புன்னகைத்தார். துளியளவும் அச்சமோ நடுக்கமோ எதுவுமில்லை அவரிடத்தில் . சற்று சங்கடத்திற்குள்ளான என் நிலையை செடி மறைவிலிருந்து ஒரு காட்டுப்பன்றி பார்த்து விட்டு மல்லாக்க படுத்து வயிற்றை பிடித்து கொண்டு குழுங்கி குழுங்கி சிரிப்பது போல ஓர் உணர்வு ஏற்பட்டது. உடலெங்கும் உஷ்ணம் கூடியது. நரம்புகள் புடைக்க துவங்கின. உதிரம் வேகமாய் சுழன்றோடியது. பற்களை நற நறவென கடித்துக்கொண்டு நானும் இயன்றவரை பணிகளுக்கு கைக்கொடுத்தேன்.

சுமார் 4 மணி நேரத்தில் மொத்தம் 45 பேர் கைகோர்த்து காட்டின் ஒரு பெரிய பகுதியினை அடையாளமின்றி மறைத்திருந்தோம். மேட்டுப்பகுதி என்பதனால் துப்புரவு பணி நினைத்தது போல அவ்வளவு சுலபமாக அமையவில்லை. மீண்டும் ஓரிரு முறைகள் இதே போன்று கூட்டுப்பணிகள் செய்தால் தான் முழுமையாக அக்காட்டினை அகற்ற முடியும். நிச்சயம் செய்வோம்.

அடுத்த முறை அச்சமிருக்காது. பள்ளி மீது பாசமும் அக்கறையும் கொண்ட இத்தனை அன்பர்கள் உடனுள்ள வரை காட்டுப்பன்றி என்ன? காண்டாமிருகமே வந்தாலும் சிக்கலில்லை.

’மகிழம்பூ’ கலைசேகர்