புத்ராஜெயா, செப். 23-


புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாக பிகேஆர் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ள நிலையில், மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணன்; அது குறித்து கவலை இல்லை என தமது சமூகத் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

”கவலைப்பட ஒன்றுமில்லை நான் அமைச்சரவைக் கூட்டத்தில் இருக்கிறேன், பிரதமருடன் மக்களுக்கான திட்டமிடல் நடைபெறுகின்றது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் தற்போதுதான் அமைச்சரவைக் கூட்டம் நடந்து முடிந்தது. இங்கு எதுவும் அமைப்பதற்கும் இல்லை கவிழ்ப்பதற்கும் எதுவும் இல்லை என கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.

இன்று காலை எதிர்க்கட்சி தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் முக்கிய அறிவிப்பை வெளியிடவிருக்கின்றார் என மலேசியா கினி இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. அதோடு அவர் ஆட்சி அமைப்பதற்கான போதுமான ஆதரவைப் பெற்றிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் 12 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த அன்வார், போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தமக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார். இதனிடையே இன்று மதியம் 2.30க்கு பிரதமர் நேரலையில் மக்களைச் சந்திப்பதால், நாட்டில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகின்றது.

ஆனால் பிரதமர் மக்களுக்கான நலத்திட்டங்கள், அல்லது அடுத்த கட்ட நடவடிக்கைகளை மட்டுமே அறிவிக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன.