கோலாலம்பூர், நவ.9-
நாட்டின் பொருளாதாரத்தைப் பராமரிக்கவும் மேம்படுத்தவும் கூடிய ஒரு சிறந்த திட்டமிடலைக் கொண்டு 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்று கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர்.ராமநாதன் தெரிவித்தார்.
எனினும், கடுமையான நிதி புழக்கம், குறைவான தேவைகள், விநியோகத் தடை, சட்ட விவகாரங்களை எதிர்நோக்கியிருக்கும் சிறு, நடுத்தர, பெரிய தொழில்முனைவர்களின் வர்த்தகக் கடன் சுமையைக் குறைப்பது மிக அவசியமாகும் என்றார் அவர்.
இவர்களுக்கு மெது கடன் (சோஃப்ட் லோன்), வர்த்தகத் தொழில் வரிகளில் கழிவு வழங்குவது ஆகியன இதற்கு ஒரு தீர்வாக அமையும் என்று அறிக்கை ஒன்றின் வழி அவர் குறிப்பிட்டார்.
அதே வேளையில், தெக்குன், தேசிய தொழில்முனைவர் கழகம், அக்ரோ வங்கி, பிஎஸ்என் ஆகியனவற்றோடு இதர நிதிக்கழகங்களின் 12 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான மைக்ரோ கிரேடிட் நிதியுதவிகளை உடனடியாக செயல்படுத்துவது அவசியம். இது பல சிறு, நடுத்தர, பி40 தொழில்முனைவர்களுக்கும் பயனளிக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
கடுமையாகப் பாதிக்கப்பட்ட சிறு, நடுத்தர வர்த்தகர்களுக்கு உதவும் பொருட்டு கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட கடனைத் திரும்பச் செலுத்துவதற்கான உதவி திட்டம் (டிஆர்ஏ), குறைந்தது 2021 மத்தியில் வரையிலும் நீட்டிக்கப்பட வேண்டும். ஏனெனில், இத்துறையினர் திசம்பர் மாத வாக்கில் மீட்சி பெறுவது சாத்தியமில்லாத ஒன்று என்றார்.
இதனிடையே, புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளப் புதிய வாடிக்கையாளர் நிதிச் சட்டம், நாட்டின் நிதிப் பயனீட்டாளர்கள் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, மொத்தக் கடன் தொகையில் 80 விழுக்காடாக உள்ளது. நிதி, கடன் நிர்வாக ஆலோசனை மன்றத்தை நாடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையும் ராமநாதன் சுட்டிக் காட்டினார்.


