காஜாங் நவ 30-
2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளுக்கான ஒதுக்கீடு மனநிறைவை அளிக்கவில்லை என ஐபிஎப் கட்சியின் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் கூறினார்.
29.98 மில்லியன் ரிங்கெட் தமிழ்ப்பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது எனக் கல்வி அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். கடந்த காலங்களில் 50 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது. இம்முறை அது குறைக்கப்பட்டிருப்பது இந்தியச் சமுதாயத்திற்கு மனநிறைவு அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
“இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கான மானியத்தை அதிகரிக்கும் நடவடிக்கையைக் கல்வி அமைச்சு முன்னெடுக்க வேண்டும். இதனைச் செய்வது காலத்தில் கட்டாயம்”
அக்கட்சியின் மத்திய செலவைக் கூட்டத்திற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதனிடையே இதுவரையில் இரண்டு மாநில கூட்டங்கள் நடந்திருப்பதாகவும் இதர மாநில பேரவை கூட்டங்கள் இன்னும் சில வாரத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என்றார் அவர்.
இந்த ஆண்டுக்குள் தேசிய பேரவையை நடத்திவிட வேண்டும் என்ற திட்டத்தைக் கொண்டிருக்கிறோம். covid-19 காரணமாக அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் காரணமாகத் தேசியப் பேரவையை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது என்பதையும் லோகநாதன் சுட்டிக்காட்டினார்.
15ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் எனத் தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹமிடி கூறினார். அதன் காரணமாக 4 சட்டமன்றத் தொகுதிகளையும் 6 நாடாளுமன்றத் தொகுதிகளையும் ஐபிஎப் அடையாளம் கண்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.


