புதுடில்லி , திசம்பர் 3:-

விவசாயிகள் நலனுக்கான இந்திய மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை மீட்டுக்கொள்ள வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப், கேரளா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டில்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தொடர்ந்து 8வது நாளாக இந்த போராட்டம் இன்றும் நீடிக்கிறது.

டில்லி அரசு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் போராட்டம் நடத்துவதற்கு விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனினும், விவசாயிகள் சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் திரண்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் வன்முறை ஏற்படாமல் தடுக்க டெல்லி காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். அரியானா , பஞ்சாப் ஆகிய மாநில எல்லைகளிலும் பலத்தப் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

விவசாயிகளின் பேரணியில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் ஏற்படாமல் தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மருத்துவப் பரிசோதனைகளுக்கான முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் நன்மைக்காகப் பேரணியாகச் சென்ற டிராக்டர்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

இந்தப் பேரணியால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் வாகனப் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. இதனால், பெருமளவில் பயணிகள் நடுவழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளனர். போராட்டத்தின் எதிரொலியாக கடந்த 1ந்தேதி சிங்கு எல்லை பகுதி மூடப்பட்டு, போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று திக்ரி எல்லைப் பகுதியும் வாகனப் போக்குவரத்துக்கு அனுமதி இன்றி மூடப்பட்டது. பதுசராய் , ஜதிகரா எல்லைகள் இரண்டு சக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

அரியானா செல்லும் எல்லைகளான ஜரோடா, தன்சா, தவுராலா, கபாஷேரா, ரஜோக்ரி என்.எச். 8, பிஜ்வாசன், பாலம் விகார் மற்றும் தண்டஹேரா ஆகியவை திறந்து விடப்பட்டன.

டில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், வர்த்தக இணை அமைச்சர் சோம் பர்காஷ் ஆகியோர் இந்திய மத்திய அரசின் பிரதிநிதிகளாகப் பங்கேற்றனர். இதில் 35க்கு மேற்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே இன்று 2-ம் கட்டப் பேச்சுவார்த்தை நடக்கிறது.

இதனை முன்னிட்டு மத்திய அரசு பிரதிநிதிகளான நரேந்திர சிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோருடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகளின் கவலைகள், அதற்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய பதில் போன்றவை குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது.

இதனை தொடர்ந்து, விவசாயிகள் அடங்கிய குழு ஒன்று மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமரை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் காலையில் புத்துணர்வுடன் இருப்பதற்காக அவர்களுக்குத் தேநீர் வழங்கப்படுகிறது. இதற்காக உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் உள்ள குருத்வாராவை சேர்ந்த தன்னார்வலர்கள், டில்லி-காசியாபாத் எல்லையில் திரண்டிருக்கும் விவசாயிகளுக்குத் தேநீர் வினியோகித்து வருகின்றனர்.

  • தினத்தந்தி