சாத்துன் | ஜூன் 19 :-
மலேசியா – தாய்லாந்து எல்லைப் பகுதியான சாத்துனில் உள்ள காண்டாமரக் காட்டில் ஏறத்தாழ 1.2 ஹெராயின் – மெட்டாஃபெட்டாமின் வகைப் போதைப் பொருளை தாய்லாந்து நாட்டு அதிகாரத்துவத்தினர் கைப்பற்றினர்.
அவை ஏறத்தாழ 1 பில்லியன் பாட் (தாய்லாந்து நாணய மதிப்பு) மதிப்பிலானது என்றும் அவை அந்தக் காண்டா மரக் காட்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும் கூறினர்.
இன்று தாய்லாந்து நாட்டு கடற்படை வெளியிட்ட அறிக்கையில், நாளிதழ் காகிதத்தில் மடிக்கப்பட்ட அந்தப் போதைப் பொருட்கள் 39 அட்டைப் பெட்டிகளிலும் காய்கறி நெகிழிப் பைகளிலும் முவாங் மாவட்டத்தில் இருக்கும் க்லோங் தம்மாலாங் காண்டாமரக் காட்டுப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை கிடந்ததாகத் தெரிவித்தது.
முதற்கட்ட விசாரணையில், அங்கு அந்தப் போதைப் பொருட்களின் விநியோகிப்பாளர்களால் போடப்பட்டப் பின்னர் இன்னொரு கும்பல் அதனை அங்கிருந்து எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டிருக்க வேண்டும் எனத் தாய்லாந்து கடற்படை கூறியது.
அந்தப் போதைப் பொருள் மூன்றாவது நாட்டுக்கு விநியோகிக்கப்பட இருந்தது.
சாத்துன் பகுதியிலேயே மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் இது தான் எனவும் அது மலேசியாவுக்குக் கடத்தப்பட இருந்ததாகவும் உள்நாட்டு ஊடகங்கள் கூறின.


