Homeஇந்தியா/ ஈழம்தமிழறிஞர் புலவர் இரா.இளங்குமரனாருக்குப் புகழ்வணக்கம் !

தமிழறிஞர் புலவர் இரா.இளங்குமரனாருக்குப் புகழ்வணக்கம் !

(30.1.1930 – 25.7.2021)

மதுரை | 26/7/2021 :-

ஐநூறுக்கு மேற்பட்ட நூல்களை வழங்கித் தமிழ்வாழ்வே தம்வாழ்வு என வாழ்ந்தவர் புலவர் இரா.இளங்குமரனார்!

இளங்குமரனாரின் இயற்பெயர் கிருட்டிணன். எட்டாவது குழந்தையென்பதால் வைக்கப்பட்ட பெயர். தனித்தமிழ்இயக்க ஈடுபாடும் மறைமலையடிகளார், ஞா.தேவநேயப்பாவாணர் நூல்தொடர்பும் இவரைப் புலவர் இரா.இளங்குமரனார் ஆக்கின.

பதினாறு வயதில் திருமணம். மனைவியார் பெயர் செல்வம்.  கலைமணி,இளங்கோ,பாரதி, திலகவதி இவர்களின் மக்கள்.

தொடக்கப்பள்ளி ஆசிரியராகத் தாம் பிறந்த நெல்லை மாவட்ட வாழவந்தாள்புரத்தில்பணியைத் தொடங்கினார்.  இறுதி நான்காண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வுத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றார்.

பணி ஓய்விற்குப்பின் திருச்சிராப்பள்ளி காவிரியாற்றங்கரையில் திருவள்ளுவர் தவச்சாலை அமைத்துத் தமிழ்நெறி வாழ்வியல்பணிகளை ஒருங்கிணைத்தார்.

தமிழாசிரியர் பணியை 1951இல் கரிவலம்வந்தநல்லூரிலும் பின்பு தளவாய்ப்புரத்திலும் தொடர்ந்த இவர் , நீண்டகாலம் பணியாற்றியது மதுரை மு.மு.மேல்நிலைப்பள்ளியில்!

இவர் நூல்கள் அனைத்தையும் சென்னைத் தமிழ்மண் பதிப்பகம் பொருள்வாரித் தொகுப்புகளாக வெளியிட்டு, வாழ்ந்த காலத்திலேயே இவரைப் பெருமைப்படுத்தியுள்ளது.

அறிஞர் சி.இலக்குவனாரோடு இணைந்து தமிழ்வளர்ச்சிக் களம்கண்டவர் இளங்குமரனார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலித் திட்டத்தில் சிறப்புத்தொகுப்பாளராக இவரை இணைத்துக் கொண்டவர் மொழிப்பேரறிஞர் பாவாணர்.

பாவாணர் வரலாறு , பாவாணர் மடல்கள் (இருதொகுதி) , பாவாணர் வேர்ச்சொல்லாய்வுத் தொகுப்பான ‘தேவநேயம்’ (14தொகுதி) , தமிழ்ச் சொற்களுக்குப் பொருட்காரணம் தரும் அருமுயற்சிப் பெருந்தொகுப்பு ‘செந்தமிழ்ச் சொற்பொருட்களஞ்சியம்’ (பத்துத்தொகுதி) – இப்படித் தனித்தன்மையான  நூல்வரிசைகளை வழங்கியுள்ளவர் இரா.இளங்குமரனார்.

‘ஒருநூல் படித்தே அறிஞராகிவிடலாம் எனுமளவிற்குச் சிறந்த நூல்’ என்று இளங்குமரனார் வியந்து பேசும் நூல் “புறத்திரட்டு’.

அழிந்துபோன நூல்களாகக்  கருதப்பட்ட ‘காக்கைப்பாடினியம்’, ‘தமிழக ஒழுகு’ முதலிய பலநூல்கள்   இவர் பதிப்பால் உயிர்பெற்றுள்ளன.

சுவடிகள் அச்சேறிய வரலாற்றை விளக்கும் இவரின் ‘சுவடிக்கலை’ எனும் பெருநூல் தருவதோ பெருவியப்பு! பாரதிதாசன் பல்கலைக்கழகம் இவருக்கு முதுமுனைவர் பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

எலும்புமுறிவாலும் நெஞ்சகச் சிக்கலாலும் கோவை மருத்துவமனைகளில்  சேர்க்கப்பட்டிருந்த அறிஞர் இளங்குமரனார், ஓரளவு நலம்பெற்று அண்மையில் மதுரை திரும்பினார்.

மதுரை திருநகர் இராமன்தெரு இல்லத்தில் 25.7.2021 இரவு 7.30க்குக் காலத்தில் கரைந்துவிட்ட இளங்குமரனாரின் இறுதிவணக்க நிகழ்ச்சி 26.7.2021 திங்கள்கிழமை மாலை 4.00 மணிக்கு நிகழ உள்ளது.

புலமையால் பொழுதளந்து தமிழுக்கு வளம்சேர்த்த பெருமகனாரின் நினைவிற்கு வலிமை சேர்ப்போம்.

 – புகழ்வணக்கம் செலுத்தும், சூலூர் பாவேந்தர் பேரவை

செந்தமிழ் அந்தணர்; மூதறிஞர் மதுரை இரா இளங்குமரனாரின் மறைவு தமிழ் உள்ளங்களை ஆறாத் துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்க்கூறு நல்லுலகத்தில் அறிஞர் பெருமக்கள் எல்லோராலும் ஏற்றிப் போற்றத்தக்கவராக விளங்கியவர். திருக்குறள் முழுதுமாகத் தமிழில் எழுதப்பட்டது. பிறமொழிக் கலப்பற்ற நூலெனச் சான்றுபட நிறுவிய மொழிச் சான்றோர். மலேசியத் தமிழ்ப் பற்றாளர்களின் மனங்களில் நிறைந்தவர்.

மலேசியாவுக்கு வருகையளித்து தமிழர் நெஞ்சங்களில் தமிழ் உணர்வை செழிக்கச் செய்த பெருமகர். அன்னாரின் மறைவினால் மனம் மிகவும் கலங்கி நிற்கின்றது.

மாந்தனை மாந்தன்

ஆக்குவது திருக்குறள்

மாந்தனைச் சான்றோன்

ஆக்குவது திருக்குறள்

மாந்தனை இறைவன்

ஆக்குவது திருக்குறள்

மாந்தனைப் பெயராக் கடவுட்

பெருநிலையில் ஒன்றச்செய்வதும்

திருக்குறள்

இந்த வாழ்வியல் மெய்ம்மத்தைத் தமிழர்களுக்கு வழங்கி இறுதி மூச்சு வரையில் திருக்குறள் நெறியிலும் தமிழ் மரபுவழியிலும் தமிழ்த் துறவியாக வாழ்ந்த அன்னாரைப் போற்றி வணங்குவோமாக!

அன்னாரின் ஆதன் பெயராக் கடவுட் பெருநிலையில் ஒன்றி அமைதிபெற வேண்டுவோமாக!

மீளாத் துயரில் , சுப.நற்குணன்

spot_img

latest articles

explore more