பெட்டாலிங் ஜெயா | 26/7/2021 :-
இங்குள்ள விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென பிரத்தியேக வகுப்புகளை ஏற்படுத்தியதன் வழி மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் அதீத கவனம் செலுத்தி வந்த இப்பள்ளியின் தலைமையாசிரியர் சுப்பிரமணியம் த /பெ பத்துமலை வேலு பணி ஓய்வு பெற்றார்.
பந்திங், சுங்கை சீடு தமிழ்ப்பள்ளி (2012-2015), ஹைகோம் தமிழ்ப்பள்ளி (2016-2017) ஆகியவற்றில் பணியாற்றிய சுப்பிரமணியம், கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெட்டாலிங் ஜெயா விவேகானந்தா தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராகப் பொறுப்பேற்றார்.
தாம் பணி புரிந்த அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை இலக்காகக் கொண்டு பல புதுப் புது திட்டங்களை முன்னெடுத்து அவற்றின் வெற்றிக்காகக் கடுமையாகப் பாடுபட்டார்.
மேற்கோளாக, விவேகானந்தா தமிழ்ப்பள்ளியில் இரண்டாக இருந்த மழலையர் வகுப்புகளை மூன்றாக அதிகரித்தது, 100 தமிழ்ப்பள்ளிகளில் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கென பிரத்தியேக வகுப்புகளை அமைத்துக் கொடுத்த தமிழ்ப்பள்ளியாக இப்பள்ளியைத் திகழச் செய்தது முதலியவை இப்பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக இவர் புரிந்த சாதனைகளைப் பறைசாற்றுகின்றன.
கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கி 10க்கும் கூடுதலான மாற்றுத் திறனாளி மாணவர்கள் இந்த வகுப்புகளில் பயின்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் யு,பி,எஸ்.ஆர் தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் சிறப்புத் தேர்ச்சி பெறுவதற்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் சங்கம் ஆகிய முத்தரப்புகளுடன் இணைந்து ஆக்கப்பூர்வ பணியை ஆற்றியுள்ளார்.
இது தவிர்த்து, இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டுத் துறையில் வெற்றிக் கோப்பைகளைக் குவிப்பதற்கும் இவர் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
காப்பார், வலம்ரோசா தோட்டத்தில் பிறந்தவரான சுப்ரமணியம் தனது வளர்ச்சிக்கு வித்திட்ட அன்புப் பெற்றோர் நினைவில் வாழும் பத்துமலை வேலு –மாரியாயி தம்பதியருக்கு இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
கல்விமான்களை உருவாக்கும் தனது உன்னத பணியை செவ்வனே ஆற்றிய மனநிறைவோடு பணி ஓய்வு பெற்றார் .சுப்பிரமணியம்.


