கோலாலம்பூர் | 14/12/2021 :-
இன்று அமைச்சரவையில் நடந்த தேசியப் பாதுகாப்பு மன்றத்தின் சந்திப்புக் கூட்டத்தில் தைப்பூசத் திருவிழாவிற்கு கொள்கை அளவில் ஒப்புதல் கிடைத்திருப்பதாக மனிதவள அமைச்சரும் ம.இ.கா. தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஶ்ரீ சரவணன் தெரிவித்தார்.
மிக நீண்ட விவாதத்திற்குப் பிறகு, தைப்பூசம் என்பது ஒரு சமய விழா என்பதன் அடிப்படையில், டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேனின் தலைமையில் இயங்கிய தேசியப் பாதுகாப்பு மன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
இந்த ஒப்புதல் கொள்கை அளவிலான ஒப்புதல். கோயில்கள், பக்தர்கள் ஆகியோருக்கான விதிமுறைகள் மிக விரைவில் முடிவு செய்யப்பட உள்ளன.
தைப்பூசத் திருவிழாவிற்கும் தேர் ஊர்வலத்திற்கும் அரசாங்கம் கொள்கை அடிப்படையில் ஒப்புதல் வழங்கி இருப்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தி எனவும் பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கும் பாதுகாப்புக்கான மூத்த அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் துன் உசேனுக்கும் டத்தோ ஶ்ரீ சரவணன் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.


