கோலாலம்பூர்,ஏப் 1-
வெளிநாடுகளில் கைநிறைய சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மலேசிய பிரஜைகளை இணைய மோசடியில் ஈடுபடுத்தும் கும்பலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசை வாங்சா மாஜூ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தின் படுக்கா டாக்டர் டான் யீ கியூ கேட்டுக் கொண்டார்.
அண்மைய சில மாதங்களாக மலேசிய பிரஜைகள் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்டு இணையம் வழி மோசடியில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தப்படுவதாக பல புகார்கள் பெறப்பட்டன. இச்சம்பவங்கள் மீது போலீசார் விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று டாக்டர் டான் கோரிக்கை விடுத்தார்.
புகார் செய்யப்பட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் இக்கும்பலால் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட மலேசியர்களின் எண்ணிக்கை உண்மையில் அதிகமாகும் என்று தெரிவிக்கப்பட்டது. பணத்தைப் பெற இணையம் வழி மோசடியில் ஈடுபடும்படி மலேசியர்களைத் தூண்டுவதோடு அங்கிருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டுமானால் பிணைப்பணம் கொடுக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டது.
அனைத்துலக நிலையில் செயல்படும் இந்தக் குற்றவாளிகளை நிதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு அனைத்துலக போலீசாரின் ஒத்துழைப்பை நாடும்படி போலீசை அவர் கேட்டுக் கொண்டார்.
இணைய மோசடியில் ஈடுபடும்படி கும்பல் ஒன்று தன்னைக் கட்டாயப்படுத்தி வருவதோடு நாடு திரும்புவதாக இருந்தால் அவர்களிடம் 20,000 வெள்ளி செலுத்த வேண்டும் என்று தற்போது கம்போடியாவில் இருக்கும் தனது மகன் லாய் (37) தன்னிடம் தொலைபேசி வழி தெரிவித்ததாக வோங் சூன் லிங் எனும் மாது தெரிவித்தார்.
தலைநகரில் இரவு விடுதியில் நிகழ்ச்சி அறிவிப்பாளராகப் பணி புரிந்து வந்த லாய் நடமாட்டக் கட்டுப்பாட்டு காலத்தில் தனது வேலையை இழந்தார். இவருக்கு மனைவியும் மகனும் உள்ளனர். இவ்விருவரும் தற்போது சூன் லிங்குடன் வசித்து வருகின்றனர்.
லாய் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வேலைக்கு ஆள் சேர்க்கும் நிறுவனம் ஒன்றின் ஏஜெண்டைச் சந்தித்தார். நீண்ட காலமாக வேலை இல்லாமல் இருந்த அவர் கம்போடியாவில் மாதம் 4,000 வெள்ளி சம்பாதிக்கலாம் என்ற அந்த ஏஜெண்டின் வார்த்தையை நம்பி வேறு எதைப் பற்றியும் சிந்திக்காமல் இரு வாரங்களுக்குப் பின்னர் அந்நாட்டிற்குப் புறப்பட்டார்.
அங்கு சென்ற பின்னர்தான் தனது முதலாளி இணையம் வழி மோசடி செய்யும் கும்பலைச் சேர்ந்தவர் என்பதை அறிந்தார்.
இவரோடு இவரைப் போல ஏமாற்றப்பட்ட மற்றவர்களும் ஒரு கட்டடத்தில் அடைத்து வைக்கப்பட்டனர். பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்கு காணப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் மலேசியர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
தாங்கள் அடைத்து வைக்கப்பட்ட இடம் சிஹானாக்வில்லே நகரமாக இருக்கக்கூடும் என்று லாய் தனது தாயாரிடம் கூறியுள்ளார். இணைய மோசடியில் ஈடுபடும்படி இவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அனைவரையும் பயம் ஆட்கொண்டது.
இந்தக் கும்பலிடமிருந்து தப்பித்த மலேசிய பிரஜை ஒருவர் கம்போடியாவில் உள்ள மலேசிய தூதரகத்தின் உதவியை நாடினார். எனினும், அந்த தூதரகத்தை விட்டு இவர் புறப்பட்ட நேரத்தில் இக்கும்பலின் தலைவன் அவருக்காக அங்கு காத்திருந்து அவரை மீண்டும் பழைய இடத்திற்கே அழைத்துச் சென்றான். அந்த தூதரகத்தில் இக்கும்பலுடன் தொடர்புடையவர்கள் இருக்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
தான் நாடு திரும்ப வேண்டும் என்று லாய் அக்கும்பலிடம் கூறியுள்ளார். தனது ஒப்பந்தம் ஜூலை மாதம்தான் முடிகிறது என்றும் இப்போதே மலேசியா திரும்ப வேண்டுமானால் அது ஒப்பந்தத்தை மீறிய செயல் என்றும் இதற்கு 20,000 வெள்ளி பிணைப்பணம் செலுத்த வேண்டும் என்றும் அக்கும்பல் இவரை மிரட்டியுள்ளது.
தனது உயிருக்கு ஆபத்து நேரிடலாம் என்ற அச்சத்தில் லாய் நடந்த சம்பவத்தை தனது தாயாரிடம் தொலைபேசி வழி தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் இவரின் தாயார் சூன் லிங் (64) வாங்சா மாஜூ நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தனது மகன் எதிர்நோக்கியிருக்கும் இக்கட்டான நிலைக்குத் தீர்வு காணும்படி உதவி கோரினார்.
லாய் உட்பட பல மலேசியர்களை ஏமாற்றி இணைய மோசடியில் ஈடுபடுத்தி வரும் கும்பலுக்கு எதிராக போலீஸ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்விவகாரம் தொடர்பில் தனது அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தின் படுக்கா டாக்டர் டான் யீ கியூ கேட்டுக் கொண்டார்.
அனைத்துலக போலீசாரின் (இண்டர்போல்) ஒத்துழைப்புடன் இக்கும்பலின் நடவடிக்கைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து அனைவரையும் மீட்க வேண்டும் என்றார் அவர்.
இச்செய்தியாளர் கூட்டத்தில் சூன் லிங் மற்றும் கெஅடிலான் வாங்சா மாஜூ கிளைத் தலைவர் என்றி லாய் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
இந்த மோசடி கும்பலை முறியடித்து சூன் லிங்கின் மகன் விரைவில் குடும்பத்தாருடன் இணைவதற்கு ஏதுவாக டத்தின் படுக்கா டான் இவ்விவகாரம் குறித்து வாங்சா மாஜூ போலீஸ் நிலையத்தில் சூன் லிங் நேற்று புகார் செய்வதற்கு உதவினார். என்றி லாயும் உடன் சென்றார்.


