குவாலகங்சார், ஜூன் 5-
கடந்த செவ்வாய்க் கிழமை குவாலா கங்சாரில் உள்ள கம்போங் தலாங் ஹுலுவில் ஆற்றின் கரையோரம் எரிக்கப்பட்ட சடலத்துடன் கொடூரமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் மரணம் குறித்து விசாரணை செய்ய அவரது காதலனுக்கு 7 நாட்கள் தடுப்பு காவல் வழங்கப்பட்டுள்ளது.
20 வயது இளைஞருக்கு எதிரான தடுப்புக் காவல் வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகப் பேராக் காவல்துறைத் தலைவர் டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் (Datuk Mior Faridalathrash Wahid) கூறினார்.
“சந்தேக நபர் மீதான விசாரணை கொலைக்கான தண்டனைச் சட்டம் 302வது பிரிவின்படி மேற்கொள்ளப்படுகிறது, விசாரணை அறிக்கை முடிந்ததும், அடுத்த நடவடிக்கைக்காக அதை அரசு வழக்கறிஞரிடம் ஒப்படைப்போம்” என்று அவர் கூறினார்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயம் அதோடு பலத்த தீக்காயங்கள்தான் மரணத்திற்கான காரணம் என பெண்ணின் உடல்கூறு பரிசோதனை முடிவு வாயிலாகக் கண்டறியப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
பல் தடயவியல் நிபுணரின் பல் பரிசோதனையின் முடிவின் படி இறந்த பெண்ணும், காணாமல் போனதாக அவரது குடும்பத்தினரால் புகாரளிக்கப்பட்டவரும் ஒருவராகவே இருக்கக்கூடுமென என காவல்துறை நம்புவதாக டத்தோ மியோர் ஃபரிடலாத்ராஷ் வாஹிட் கூறினார்.
குவாலா கங்சார், கம்போங் தலாங் ஹுலு அருகே ஆற்றங்கரையில் எரிந்த நிலையில் பிற்பகல் 3.05 மணியளவில் ஒரு பெண்ணின் சடலம் பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டன.
தலையில் காயங்களின் தடயங்களுடன் சடலம் பொதுமக்களால் கண்டுபிடிக்கப்படுவதற்கு 24 மணி நேரத்திற்குள் அந்த பெண் கொல்லப்பட்டிருக்கக்கூடுமென நம்பப்படுகிறது.
மேலும் சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இரத்தத்தின் தடயங்கள் கொண்ட கான்கிரீட் கல் துண்டு, பாதிக்கப்பட்டவரைத் தாக்கப் பயன்படுத்தப்பட்ட ஆயுதமாக இருக்கக்கூடுமென நம்பப்படுகிறது.


