சுங்கை சுப்புட், ஜூன் 5-

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலில் P062 சுங்கை சுப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சி வேட்பாளர் எஸ்,கேசவன் வெற்றி பெறுவதற்குப் பெருந்துணையாக நின்ற மக்கள் நீதிக் கட்சி ( பிகேஆர்), ஜனநாயக செயல் கட்சி (டிஏபி) ஆகியவற்றைச் சேர்ந்த 5000 ஆயிரம் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட கட்சிகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதோடு வரும் 15ஆவது பொத் தேர்தலில் அத்தொகுதியில் போட்டியிடக்கூடுமென நம்பப்படும் மஇகா தலைவர் தான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்கள்.

இதன் தொடர்பாகச் சுங்கை சிப்புட் பிகேஆரை சேர்ந்த உமாபரன், , சுங்கை சிப்புட் டிஏபி கட்சியைச் சேர்ந்த டேவிட் ராஜா உட்பட அத்தொகுதியைச் சேர்ந்த 19 கிளைத் தலைவர்கள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

உங்கள் சிங்கை சிப்புட் வாக்காளர்களாகிய நாங்கள் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் இங்குள்ள மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவார் என்று நம்பினோம் . ஆனால், 2018 முதல் இப்போது வரை, அவரது சேவை வாக்காளர்களைப் பெரிதும் ஏமாற்றியது. இது அவரது வெற்றிக்கு நாங்கள் அளித்த பங்களிப்பையும் புறக்கணித்ததற்கு சமமெனக் கூறியுள்ளார்கள்.

நாடாளுமன்ற ஒதுக்கீடு கிடைக்காததால் மக்கள் சேவை மையத்தைக் கேசவன் மூடிவிட்டார். இதனால் இப்பகுதி மக்களுக்கு எந்தவொரு உதவிகளும் கிடைக்கவில்லை.

அவர் மீது கட்சியின் உயர்மட்டத் தலைமைக்கு பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வந்தாலும், அவரை கண்டிக்கவில்லை. இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினரின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

இப்பகுதி மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களைக் கேசவம் மிகப் பெரிய விவகாரமாக எடுத்துக் கொள்ளவில்லை என தாங்கள் கருதுவதாகவும், இதுதான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பண்பாகவும் உயர்மட்ட தலைவர்களின் நிலைப்பாடாக இருந்தால் சுங்கை சிப்புட் வாக்காளர்கள், பிகேஆர், டிஏபி உறுப்பினர்கள் என்ற முறையில் இதனைக் குறிப்பிட விரும்புகின்றோம் :

  1. நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவனின் சேவையில் நாங்கள் திருப்தி அடையவில்லை
  2. பக்காகத்தான் ஹராப்பான் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டோம்
  3. நாங்கள் உடனடியாக கட்சியை விட்டு வெளியேறுவோம்
  4. P062 சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் பக்காகத்தான் ஹராப்பானிலிருந்து எந்த வேட்பாளரையும் நாங்கள் ஆதரிக்க மாட்டோம்

என அவர்கள் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

கட்சி பேதமின்றி அனைவரையும் அரவணைக்கும் தான்ஶ்ரீ விக்வேஸ்வரனின் அணுகுமுறை எங்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அவர் நாடாளுமன்ற ஒதுக்கீட்டை நம்பியில்லை. அதோடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இருந்தால் மட்டுமே உதவுவேன் என்று காரணமும் கூறவில்லை.

இதனால், வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் தொகுதியில் தான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு பிகேஆர், டிஏபி கட்சிகளை விட்டு விலகிய சுமார் 5000 வாக்காளர்கள் பிளவுபடாத ஆதரவை வழங்குவோம் என அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.