சென்னை, ஜூன் 29-

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவையே கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகை மீனா. சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம் 2, அண்ணாத்த, ப்ரோ டாடி உள்ளிட்ட படங்களிலும் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

குழந்தை பருவம் முதலே சினிமாவில் நடித்து வரும் நடிகை மீனாவின் வீட்டில் திடீரென இப்படியொரு சோகம் நிகழும் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் நடிகை மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றனர். நுரையீரலில் வித்யாசாகருக்கு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்த நிலையில், அதற்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி மாற்று நுரையீரல் கிடைக்காமல் நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த நிலையில், மீனா உடைந்தே போய் விட்டார்.

நடிகர் சரத்குமார், ரஜினிகாந்த் உள்ளிட்ட பிரபலங்கள் சமூக வலைதளங்கள் மூலமாகவும் போன் மூலமாகவும் நடிகை மீனாவுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். #Meena ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மீனாவின் கணவர் உயிரிழந்த சோகத்தை பொறுக்க முடியாமல் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், நடிகை மீனாவின் வீட்டுக்கு கொண்டு வரப்பட்ட உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த காலை முதலே திரை பிரபலங்கள் படையெடுத்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா, பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு உள்ளிட்ட படங்களில் சேரன் இயக்கத்தில் நடிகை மீனா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இந்நிலையில், மீனாவின் கணவர் நுரையீரல் பாதிப்பு காரணமாக உயிரிழந்த சோக செய்தியை கேட்ட உடனே மீனாவின் வீட்டுக்கு வந்து தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் நடிகை மீனாவுக்கும் அவர் ஆறுதல் கூறியுள்ளார்.

நன்றி : ஓன்தமிழ்