லண்டன், செப்.24-

இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரும் லிவர்புலும் கடும் போராட்டத்துக்குப் பின்னர் வெற்றியைப் பதிவுச் செய்துள்ளன. சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் 3 – 2 என்ற கோல்களில் வெஸ்ட் ஹேம் யுனைடெட்டை வீழ்த்திய வேளையில் லிவர்புல் அணியும் அதே கோல் எண்ணிக்கையில் லெய்செஸ்டர் சிட்டிக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளது.

வெஸ்ட் ஹேம் யுனைடெட்டுக்கு எதிராக முதல் நான்கு நிமிடங்களில் ஹாரி கேன் இரண்டு கோல்களை போட்டு டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரை முன்னணியில் வைத்தார். எனினும் ஹாவியர் ஹெர்னான்டேஸ், செய்கோ கோயேத்த போட்ட இரண்டு கோல்களின் வழி வெஸ்ட் ஹேம் யுனைடெட் ஆட்டத்தை சமப்படுத்தியது.

எனினும் கிறிஸ்டியன் எரிக்சன் போட்ட கோல் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பரின் வெற்றியை உறுதிச் செய்தது. இதனிடையே கிங் பவர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவர்புல் கிளப்பின் அதிரடி ஆட்டத்தில் லெய்செஸ்டர் சிட்டி நிலைக்குலைந்துப் போனது.

முதல் பாதி ஆட்டத்தில் முஹமட் சாலா, பிலிப்பே கோத்தின்ஹோ போட்ட இரண்டு கோல்களின் வழி லிவர்புல் முன்னணிக்கு சென்றது.எனினும் முதல் பாதி ஆட்டத்தில் சிஞ்சி ஒக்காசாக்கி போட்ட கோலின் மூலம் லெய்செஸ்டர் சிட்டி மீண்டும் ஆட்டத்துக்குள் நுழையும் வாய்ப்பைப் பெற்றது.

இரண்டாம் பாதி ஆட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தாக்குதலின் வழி லிவர்புல் தனது மூன்றாவது கோலைப் போட்டது. சில நிமிடங்களில் லெய்செஸ்டர் சிட்டியின் இரண்டாவது கோலை ஜேமி வார்டி போட்டார்.

ஆட்டத்தை சமப்படுத்த பினால்டி மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தாலும் லெய்செஸ்டர் சிட்டியின் ஜேமி வார்டி அதனை நழுவ விட்டார். இறுதி வரை லெய்செஸ்டர் சிட்டி கடும் போராட்டத்தை நடத்தினாலுல் லிவர்புல் வெற்றியை உறுதிச் செய்தது.