வாங்சா மாஜூ, ஆக. 2-
வாங்சா மாஜூ நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 200 வசதியற்ற பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் விரைவில் இலவச மடிக் கணினிகளைப் பெறவிருக்கின்றனர்.இந்த மடிக் கணினிகளைப் பெற மொத்தம் 255 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர். இவர்களில் 200 பேர் இதற்குத் தகுதி பெற்றதாக கெஅடிலான் வாங்சா மாஜூ தொகுதி தலைவர் என்றி லாய் கூறினார்.நடப்பு பொருட்கள் விலையேற்றத்தைத் தொடர்ந்து தங்கள் பிள்ளைகளுக்கு கணினி வாங்கிக் கொடுப்பதில் பெற்றோர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இதனால் பிள்ளைகள் கல்வியைத் தொடர்வது தடைபடுகிறது.
மாத குடும்ப வருமானம் 5000 வெள்ளிக்குக் குறைவு, மாணவர்களின் வயது 17க்கும் 24க்கும் இடையே இருப்பது, உடன்பிறப்புகள் எண்ணிக்கை, வீட்டில் மடிக் கணினிகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் மாணவர்கள் இந்த இலவச கணினிகளைப் பெற தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக இங்குள்ள கெஅடிலான் சேவை மையத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசினார். இதன் அடிப்படையில் எஸ்பிஎம், எஸ்டிபிஎம், டிப்ளோமா, அடிப்படை கல்வி மற்றும் பட்டப்படிப்பு மேற்கொள்ளும் 200 மாணவர்கள் இந்த இலவச மடிக் கணினிகளைப் பெற தகுதி பெற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார் .
மாணவர்கள் கூகள் பாரம் மூலமாகவும் நேரடியாகவும் அனுப்பிய விண்ணப்பங்கள் அங்கீகாரத்திற்காக தற்போது ஐசியு பிரிவுக்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும் அவை அங்கீகரிக்கப்பட்ட பின்னர் ஏறத்தாழ இம்மாத மத்தியில் அல்லது மாத இறுதிவாக்கில் சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் வாங்சா மாஜூ நாடாளுமன்ற மடிக் கணினி உதவி குழு தலைவர் அஸ்ஃபார் அஸா குறிப்பிட்டார்.
அக்டோபர் மாதம் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி நுழைவுக்கு மாணவர்கள் இவற்றைப் பயன்படுத்திக் கொள்ள உதவும் என்று வாங்சா மாஜூ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தின் படுக்கா டாக்டர் டான் யீ கியூ சார்பில் பேசிய அவர் கூறினார். இச்செய்தியாளர் கூட்டத்தில் வாங்சா மாஜூ கெஅடிலான் இளைஞர் பிரிவு உதவி தலைவர் ஷோன் டினேஷும் கலந்து கொண்டார்.


