வாங்சா மாஜூ, ஆக.1-

  கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் நாடாளுமன்ற தொகுதியை இழப்பதற்கு வகை செய்யும் கட்சி தாவல் தடை சட்ட மசோதா  அண்மையில் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

  இதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளித்தனர். இந்தச் சட்டதிருத்த மசோதாவின் கீழ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்கள்  நாடாளுமன்ற தொகுதியை இழக்கமாட்டார்கள்.

  சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் கட்சி கலைக்கப்பட்டாலோ அல்லது அது மற்ற கட்சிகளுடன் இணைந்தாலோ அல்லது மக்களவை சபாநாயகராகத் திகழ்வதற்காக கட்சியில் இருந்து விலகினாலோ அவர்கள் தங்கள் தொகுதிகளை இழக்க மாட்டார்கள்.

  அதே சமயம், சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் ஏதாவது ஒரு கட்சியில் இணைந்தாலோ அல்லது கூட்டணி கட்சி உறுப்பினர்களாகத் திகழ்ந்தாலோ தொகுதியை இழந்துவிடுவர்.

  கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதைத் தொடர்ந்து கட்சி தாவல் தடை சட்ட மசோதா விவகாரம் எழுந்தது. இதன் உச்ச கட்டம்  பாக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழும் அளவுக்கு 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஷெரட்டன் நடவடிக்கையாகும்.

  கட்சி தாவல் தடை சட்ட மசோதாவின் பலன் எந்த அளவு இருக்கும் என்பது தெரியாவிட்டாலும் கூட இதன் அறிமுகம் கடந்த 2 ஆண்டுகளாக நாட்டின் அரசியல் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கான நல்ல தொடக்கம் ஆகும்.

  கட்சி தாவலால் நாட்டின் நிர்வாக முறை வெகுவாகப் பாதிக்கப்பட்டது. 2020 இல் நடந்த பதவி பறிப்பு அரசியல்வாதிகளின் மோசமான போக்கையே பறைசாற்றியது.

 ஷெரட்டன் நடவடிக்கையைத் தவிர்த்து மலேசியா இதே போன்று மற்றுமொரு முக்கியமான சம்பவத்தை எதிர்நோக்கியது.1986 ஆம் ஆண்டு சபாவில் சட்டமன்ற உறுப்பினர்களின் கட்சி தாவலால் பிபிஎஸ் அரசாங்கம் கவிழ்ந்தது.

     செப்டம்பர் மாதம் அமலுக்கு வரும் என்று கூறப்படும் இச்சட்ட மசோதாவை இதற்குப் பின்னர் வரும் பொதுத் தேர்தலில் சோதனை செய்யலாம். கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் கெஅடிலான் சின்னத்தைத் தேர்ந்தெடுத்தனர். வரும் பொதுத் தேர்தலிலும் அவர்கள் இக்கட்சியையே தேர்ந்தெடுக்கலாம். எனது பிரதமர் தேர்வு நிச்சயம் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமே.

-ஹென்றி லாய்

தலைவர், கெஅடிலான் வாங்சா மாஜு தொகுதி