கோலாலம்பூர் –

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 3 தவணைக் காலம் மட்டுமே என்ற புதிய சட்டம் அமலுக்கு வர வேண்டும்
என்று பேரின்பம் மலேசியா இயக்கத்தின் தலைவர் யு.தாமோதரன் வலியுறுத்தினார்.கடந்த காலங்களில்
நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவது ஒரு தொடர்கதையாக இருந்தது.பல கோரிக்கைகள்,
விவாதங்களுக்கு பின் நாடாளுமன்றத்தில் கட்சி தாவல் சட்டம் தாக்கல் செய்யப்பட்டது.அந்த புதிய சட்டத்தை
நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர்.

வரும் காலங்களில் கட்சி தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்
என நம்பப்படுகிறது.இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு
கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும்.குறிப்பாக ஒருவர் ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கு 3 தவணைக் காலம்
மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்.அதற்கு மேல் போட்டியிட அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடாது.

இதன் மூலம் அத்தொகுதியில் போட்டியிட புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஒருவருக்கே வாய்ப்பு
வழங்கப்படும் போது கட்சியில் சேவையாற்றி வரும் மற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.அதே வேளையில்
நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே ஊழல், முறைகேடுகள் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க முடியும்.
ஆகையால் கட்சி தாவல் சட்டம் போன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 3 தவணைக்கால
சட்டமும் அமலுக்கு வர வேண்டும் என்று தாமோதரன் கூறினார்.