spot_img
15.5 C
London
spot_img
Home மலேசியா கல்வி பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவிலானச் சுதந்திர தின விழா

பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவிலானச் சுதந்திர தின விழா

கோலாலம்பூர், ஆக.24-
பூச்சோங் தமிழ்ப்பள்ளியில் பள்ளி அளவிலான சுதந்திர மாதத் தொடக்க விழா கடந்த 15ஆம் தேதி (திங்கள்கிழமை)
இனிதே நடைபெற்றது. ‘ஒரே மலேசியக் குடும்பமாய் இணைந்து வலுப் பெறுவோம்’ என்ற கருப்பொருளின்
அடிப்படையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டக் கோர்வையான நிகழ்ச்சிகளோடு இவ்விழா இனிதே நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் மாண்புமிகு செனட்டர் டத்தோ டி.மோகன் அவர்களின் வருகை
அமைந்தது. ஒற்றுமையே சீரான வாழ்க்கைக்கும் தனித்துவமான சமூகக் கட்டமைப்புக்கும் வழிக்கோலாக அமையும்
எனத் தமது திறப்புரையில் அவர் தெரிவித்ததோடு இந்நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவருக்கும் தமது இனிய
சுதந்திர தின வாழ்த்துகளையும் புலப்படுத்திக் கொண்டார்.

மாணவர்கள் நாட்டுப்பற்றுப் பாடல்களைப் பாடியதோடு கைகளில் தேசியக் கொடியை ஏந்தி தங்களின்நாட்டுப்பற்றினை
வெளிக்கொணர்ந்த பாங்கு பாராட்டுக்குரியது. பள்ளி வளாகமே வண்ண வண்ணக் கொடிகளால் புடை சூழப்பட்டிருந்தது.
விழாக் கோலம் பூண்ட சுதந்திர தினக் கொண்டாட்டம் பள்ளியின் தலைமையாசிரியர் உயர்திரு ம.மலரவன் அவர்களின்
தேசப்பற்று மிகுந்த வரவேற்புரையுடன் ஆரம்பமானது. பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவி, ஸ்ரீமதி மாலா பெருமாள்
மற்றும் அவர்தம் செயலவை உறுப்பினர்களின் சிரமம் பாராத வருகையும் இந்நிகழ்ச்சிக்கு உவகையைச் சேர்ப்பித்தன.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய ஸ்ரீமதி மாலா பெருமாள், சுதந்திரம் என்பது நாட்டுக் குடிமக்கள் அனைவரும் ஒருசேர கொண்டாடி துதிப் பாடக்கூடிய அரிய பெரிய வரலாற்று பொக்கிஷம் எனவும் புகழாரம் சூட்டினார். அதோடு மட்டுமின்றி சுதந்திர மாதத்தை அனுசரிக்கும் பொருட்டு மாணவர்களுக்கானபோட்டிகளும் அறிவிக்கப்பட்டன. தேசிய தின உடைகளைப் பிரமுகர்கள் தலைமை மாணவர்களுக்கு அணிவித்து தேசிய தின விழாவின் தொடக்க நிகழ்ச்சிக்கு மேலும் வலுசேர்த்தனர்.