டானாவ் கோத்தா, ஆக.23-
இங்குள்ள ஜாலான் 1/23இக்கு அருகில் இருக்கும் டானாவ் கோத்தா தேசிய பள்ளி அருகே பாதசாரிகளுக்கான
பாதை சேதமடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் நடந்து செல்ல சிரமமாக உள்ளது என்று பெற்றோர்களிடமிருந்து
கடந்த ஜூன் மாதத்தில் வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்திற்குப் புகார் அனுப்பப்பட்டது.
இந்த நடைப்பாதை நடுவே அதிகக் கற்கள் இருப்பதால் பாதசாரிகளுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், இதன் வெளிப் பகுதியிலுள்ள கால்வாய் விரிசல் கண்டுள்ளதால் நீரோட்டம் முறையாக இல்லை.
இதனால்தான் கடை வீடு பகுதியிலுள்ள சாலை முழுவதும் மழை பெய்யும் நேரங்களில் தண்ணீர் தேங்கிக் கிடக்கும்
என்று நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி, என்றி லாய் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தை வங்சா மாஜு கெஅடிலான் தொகுதி கடுமையானதாகக் கருதியதைத் தொடர்ந்து இதற்கு
உடனடித் தீர்வுக் காணும் பொருட்டு கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் சாலைப் பிரிவைத் தாம் தொடர்பு
கொண்டதாக அவர் சொன்னார்.மோசமான மற்றும் சமநிலையற்ற நடைபாதை சிறார்களுக்கு விபத்துகளை
ஏற்படுத்தக்கூடும் என்றார் அவர். அதோடு மட்டுமின்றி உடைந்த கால்வாய்க்கு உடனடித் தீர்வு காணப்படா விட்டால்
மிக மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் என்று பத்திரிகையாளர்களிடம் என்றி லாய் விவரித்தார்.


