சமூகத்தின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த மக்களின் மனதில் நிறைந்த ஒரு தலைவராகத் திகழ்ந்த துன் ச.சாமிவேலுவின் நல்லுடல் அவரின் குடும்பத்தினர், அரசியல் தலைவர்கள், மற்றும் பொது மக்களின் கண்ணீரோடு நேற்று தகனம் செய்யப்பட்டது.

மஇகா முன்னாள் தேசிய தலைவரும், பொதுப்பணி அமைச்சரும், இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கான முன்னாள் தூதருமான துன் சாமிவேலுவின் மறைவு நாட்டிற்கு மட்டுமல்லாது இந்திய சமூகத்திற்கும் பேரிழப்பாகும் என்று வருணிக்கப்படுகிறது.

அரசியல், கல்வி, பொருளாதாரம் போன்ற துறைகளில் பலருக்கு வழிகாட்டியாக இருந்து அவர்களின் வாழ்க்கையை ஒளிமயமாக்கிய ஒப்பற்ற தலைவராக விளங்கியவர் துன் சாமிவேலு. பல குடும்பங்களில் பட்டதாரிகளை உருவாக்கி இந்திய சமூகத்தில் அதிகமான கல்விமான்கள் உருவாகக் காரணமாக இருந்தவர். டேஃப் கல்லூரி மூலம் இளைஞர்கள் தொழில் கல்வி பெற்று வாழ்க்கையை செம்மையாக்கிக் கொள்ள வழி வகுத்தவர்.

தான் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த காரணத்தினால் வறிய நிலையில் உள்ளவர்களின் துயரைப் போக்க செவ்வாய்தோறும் மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை செவிகொடுத்துக் கேட்டு தீர்வு கண்டார்.

உயர் கல்வி தொடர்வதற்கு பொருளாதாரம் தடையாக இருக்கக் கூடாது. கல்வி ஒன்றே இந்தியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் திறவுகோள் என்று அடிக்கடி மஇகா மாநாடுகளில் துன் சாமிவேலு வலியுறுத்துவது உண்டு, அவ்வகையில் சிரமப்படும் மாணவர்களுக்கு மாஜூ கல்வி மேம்பாட்டுக் கழகம் வழி கடனுதவி வழங்கி அவர்கள் தங்கு தடையின்றி உயர்கல்வியைத் தொடர உதவியது சமூகத்தின் மீது அவர் கொண்டிருந்த அக்கறையைப் புலப்படுத்தியுள்ளது.

தமிழ் மொழி பற்றாளரான துன் சாமிவேலு தமிழ் மொழி, இலக்கிய நிகழ்ச்சிகளில் தவறாது கலந்து கொள்வதோடு உள்ளூர் எழுத்தாளர்களின் நூல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டு அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணை புரிவதைக் கடமையாகக் கொண்டிருந்தார்.

நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்த தமிழ் நேசன் நாளேட்டின் உரிமையாளராக இருந்து தமிழ் மொழி மேம்பாட்டிற்கு அளப்பரிய பங்காற்றியதோடு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி அவர்களின் குடும்ப மேம்பாட்டிற்கு பெரும் பங்கையாற்றியுள்ளார்.

31 ஆண்டுகள் மஇகா தேசிய தலைவராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் நாட்டில் பழமையான தமிழ்ப்பள்ளிகள் இணைக் கட்டடங்கள் பெற்று கம்பீர தோற்றத்தோடு காட்சியளிப்பதற்குக் காரணமாக இருந்தவர்.

அரசாங்க பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயில இடம் கிடைக்காத மாணவர்களுக்காக கெடாவில் ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகத்தைத் தோற்றுவித்தார். மருத்துவராகும் பல மாணவர்களின் கனவை இதன் வழி நனவாக்கிய பெருமை இவரையேச் சாரும்.

பொதுப் பணி அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த காலத்தில் நாட்டின் நெடுஞ்சாலைகள் நிர்மாணிப்பு குறிப்பாக பினாங்கு பாலம் இவரின் ஆற்றல் மீது உலக மக்களையே திரும்பிப் பார்க்க வைத்தது.

அஞ்சா நெஞ்சர், எதிலும் நேர்த்தியைக் காண விரும்புபவர், கடின உழைப்பாளி, நேரந் தவறாதவர், கருணை உள்ளம் கொண்டவர், பிறர் முன்னேற்றத்தில் மனநிறைவு காண்பவர் என துன் சாமிவேலுவின் நற்பண்புகளின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம்.

நாடு மற்றும் இந்திய சமுதாய மேம்பாட்டிற்காக மறைந்த துன் சாமிவேலு ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு அவருக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இன, சமய பேதமின்றி இங்குள்ள ஜாலான் ஈப்போ, வேதவனத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு வந்த மக்களின் வருகை பிரதிபலித்தது.

பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன், உதவி தலைவர் டத்தோ டி. மோகன் , மத்திய செயலவை உறுப்பினர்கள், மகளிர், இளைஞர் பிரிவு உட்பட நாடு முழுமையும் இருந்து மஇகா பொறுப்பாளர்கள் துன் சாமிவேலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

மூத்த அரசியல் தலைவர் லிம் கிட் சியாங், கோவிந்த் சிங், திரேசா கோக் போன்ற எதிர்க்கட்சி தலைவர்களும் தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தியவர்களில் அடங்குவர்.

துன் சாமிவேலுவின் மறைவையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி உட்பட உலகத் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், வர்த்தக பிரமுகர்கள் என பல துறைகளைச் சார்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

கொடையளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும் உடையானாம் வேந்தருக்கு ஒளி எனும் குறளுக்கு ஏற்ப உதவி கேட்டு வருவோருக்கு பாரி வள்ளலாக இருந்து கொடுத்து உதவிய தலைவர் மறைந்தாலும் மக்கள் மனதில் என்றும் நீக்கமற நிறைந்திருப்பார்.