கோலாலம்பூர், செப்.18-

     நம்பிக்கை குழுமத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி பல துறைகளில் சிறந்து விளங்கும் இந்தியர்களைச் சிறப்பிக்கும் பொருட்டு விருது வழங்கும் விழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

       அக்டோபர் 8, 9 ஆகிய இரு தினங்களுக்கு இரவு மணி 7.30 தொடங்கி 11.30 வரை தலைநகர், உலக வாணிப மையத்தில் இந்த பிரம்மாண்ட விழாக்கள் நடைபெறும் என்று நம்பிக்கை குழுமத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முகம்மது இக்பால் தெரிவித்தார். 

      இந்த விருது விழாக்களில் “துன் சம்பந்தன்” வாழ்நாள் சாதனையாளர் விருது, “ டான்ஸ்ரீ எஸ்.ஓ.கே. உபைதுல்லா” வாழ்நாள் சாதனையாளர் விருது, “ தமிழவேள் கோ. சாரங்கபாணி” வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியன முதன்மை விருதுகளாக முதல் நாளில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

     இந்தியர்களின் அரசியல், கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்காகப் பாடுபட்டவர்களுக்காக மூத்த தலைவர்களின் பெயரில் இந்த விருதுகள் வழங்கப்படவிருப்பதாக இங்கு நடைபெற்ற நம்பிக்கை விருதுகள் தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ இக்பால் விளக்கமளித்தார்.

     சிறந்த உள்நாட்டு நடிகர், நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர், சிறந்த வானொலி அறிவிப்பாளர், சிறந்த செய்தி வாசிப்பாளர் என 12 பிரிவுகளுக்கான தேர்வு இணைய வாக்களிப்பு மூலம் நடைபெறும் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார்.

     மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் தகுதியானவர்கள் இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். இவற்றில் 6 விருதுகள் சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களிடையே பிரசித்தி பெற்றவர்களுக்கு  வழங்கப்படும் என்று  அவர்  மேலும் விவரித்தார்.

     அடுத்து, இரண்டாம் நாளில் பல சவால்களுக்கு மத்தியில் வர்த்தக துறையில் சாதனை புரிந்தவர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பிக்கப்படுவர் என்று டத்தோஸ்ரீ இக்பால் குறிப்பிட்டார்.

     தொடர்ந்து, சிறந்த மருத்துவர், சிறந்த வழக்கறிஞர், சிறந்த இளம் வர்த்தகர், முன்னோடி வர்த்தகர், சிறந்த விரிவுரையாளர், சிறந்த ஆசிரியர் உள்ளிட்ட இதர 16 பிரிவுகளுக்கான விருதுகளை டத்தோஸ்ரீ இக்பால் தலைமையிலான நம்பிக்கை குழுமத்தின் தேர்வு குழு தீர்மானிக்கும்..

     பல துறைகளில் சிறந்து விளங்கி வருபவர்களின் திறமைகளை  மக்கள் அறிந்து கொள்வதற்கு இந்த விருதளிப்பு விழா உறுதுணை புரியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.