கோலாலம்பூர், செப். 18 –
கல்வி வாயிலாகவே இந்திய சமூகத்தை மேன்மையுறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இதுவரை 28,000 பட்டதாரிகளை உருவாக்கியிருக்கும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் சேவை பாராட்டுக்குரியது என்றார் மலேசியாவிற்கான இந்திய தூதர் ஸ்ரீ பி.என். ரெட்டி.
கடந்த 40 ஆண்டுகளாக மாணவர்களை பட்டதாரிகளாக உருவாக்குவதில் அவர்களுக்குத் தேவையான தன்முனைப்பு உட்பட பல்வேறு தயார் நிலைகளை ஸ்ரீ முருகன் நிலையம் மேற்கொண்டு வருவது போற்றத்தக்கவை என்றார் அவர்.
2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பரவாசி மாநாட்டில் கல்வி மற்றும் சமூக சேவைக்காக ஸ்ரீ முருகன் நிலைய இயக்குநர் டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் எம். தம்பிராஜா இந்திய அதிபரால் பிரவாசி பாரதிய சம்மன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.
கல்வியோடு இறை நம்பிக்கை, பிறரை மதித்தல், சிந்தனை புரட்சி போன்ற அம்சங்களையும் புகுத்தி கட்டொழுங்குமிக்க மாணவர் சமூகத்தை உருவாக்கும் பணியில் ஸ்ரீ முருகன் நிலையம் ஈடுபட்டு வருகிறது என்று இங்குள்ள மலாயாப் பல்கலைக் கழகத்தில் இக்கல்வி மையத்தின் 40 ஆண்டு நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரை ஆற்றுகையில் குறிப்பிட்டார்.
1982 ஆம் ஆண்டில் நான்கு மையங்கள் மூலம் தொடங்கப்பட்ட ஸ்ரீ முருகன் நிலையம் நாடு முழுமையும் 103 மையங்களாக விரிவாக்கம் கண்ட பின்னர் கோவிட் – 19 தொற்று காலத்தில் இயங்கலை வாயிலாக 127 மையங்களாக ஏற்றம் கண்டன என்று இக்கல்வி நிலைய தோற்றுநரும் இயக்குநருமான டாக்டர் தம்பிராஜா கூறினார்.
“நமது ஒவ்வொருவரிடத்திலும் பேராற்றல்மிக்க சான்றோர்களின் மரபணு உள்ளது. ஆகையால், அனைவருக்கும் சாதிக்கும் ஆற்றல் உண்டு. தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி வழி மாணவர்கள் சரித்திரம் படைக்கலாம்” என்று தமது எழுச்சியுரையில் அவர் விவரித்தார்.
கல்வியாளர்கள், தொழில் நிபுணர்கள், பல துறை சார்ந்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என திரளானோர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு, முன்னுதாரண எஸ்எம்சி குடும்பம் கௌரவிப்பு, மூத்த எஸ்எம்சி உறுப்பினர்கள் கௌரவிப்பு, ஸ்ரீ முருகன் நிலையத்தை தற்போது வழிநடத்திக் கொண்டிருக்கும் சுரேன் கந்தா தலைமையிலான அணியினரின் அறிமுகம், பார்வையற்ற இருவருக்கு கௌரவிப்பு, சென்னை ‘நீயா நானா ‘ நிகழ்ச்சி கோபிநாத்தின் தன்முனைப்பு உரை போன்றவையும் விழாவிற்கு முத்தாய்ப்பாக அமைந்தன.