ஜாகர்த்தா, செப் 24-

சர்வதேச இளம் ஆய்வாளர் 2017இல் நமது ஆறு தமிழ்ப்பள்ளிகளை பிரதிநிதித்து 11 அணிகள் கலந்து கொண்டு 10 தங்கம், 1 வெள்ளி, மற்றும் 2 சிறப்பு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளன. சர்வதேச இளம் ஆய்வாளர் விருது (IYIA) 2017இல் காஜாங் தமிழ்ப்பள்ளி 6 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 சிறப்பு விருதினையும், பூச்சோங் தமிழ்ப்பள்ளி 1 தங்கம் மற்றும் 1 சிறப்பு விருதினையும், தமான் துன் அமீனா தமிழ்ப்பள்ளி 1 தங்கத்தினையும், மெந்தகாப் தமிழ்ப்பள்ளி 1 தங்கத்தினையும், மாசாய் தமிழ்ப்பள்ளி 1 தங்கத்தினையும், ஜெஞ்சாரும் தமிழ்ப்பள்ளி 1 தங்கத்தினையும் வென்றெடுத்துள்ளது.

இந்தோனேசியா ஜகார்த்தா மெர்ச்சு புவானா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச இளம் ஆய்வாளர் 2017 இல் கலந்து கொண்ட இந்த மாணவர்கள் இந்தச்சாதனையை நிகழ்த்தியுள்ளனர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சர்வதேச அளவில் சாதனை படைத்திருப்பதானது ஆரோக்கியமான ஒன்று. தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு எனும் கூற்றினை இது போன்ற சாதனைகள் உறுதியாக்குகின்றன.

அந்த வகையில் நமது சாதனை மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் அந்த மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியப் பெருமக்கள் என அவர்களின் அர்ப்பணிப்பும் போற்றப்படுகிறது. இந்த போட்டியில் மொத்தம் 6 தங்கப்பதக்கங்களை வென்ற காஜாங் தமிழ்ப்பள்ளி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறிப்பாக இத்தமிழ்ப்பள்ளியை சேர்ந்த அபிராபி ராமச்சந்திரன், கனகதுர்கா சேவராஜ், கீர்த்தி ராமு, கஷ்வினி தேவேந்திரன், மாளவிகா முனியாண்டி ஆகிய மாணவர்கள் சிறந்த இளம் ஆய்வாளர்கள் என்ற விருதை வென்று தமிழ்ப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.

இந்த வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பொறுப்பாசிரியர் தங்கேஸ்வரி அண்ணாமலை, தலைமையாசிரியர் ஜோன் போஸ்கோ, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சுதாநந்தன், நன்கொடையாளர்கள் பெற்றோர்கள், ஆசிரியர்கள் அனைவருக்கும் பள்ளியின் புறப்பாட நடவடிக்கைக் குழு ஆசிரியர் நெடுஞ்செழியன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே பூச்சோங் தமிழ்ப்பள்ளியைச் சார்ந்த திவ்யன் மோகன், ரியாஸ்ரீ ஸ்ரீதரன், தர்ஷனா சிவபாலன், விலாஷிகா விஜயகுமார், மற்றும் கீர்த்தி ராஜ் ஆகியோர் இணைந்து சர்வதேச இளம் ஆய்வாளர் விருது (IYIA) 2017இல் முதன்முறையாகக் கலந்து கொண்டு தங்கம் மற்றும் தங்களது படைப்புக்கான சிறப்பு விருதினையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.

இவர்கள் முட்டை ஓடு மற்றும் வீணாகும் பொருட்களில் இருந்து முகமூடியை தயாரித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பொருளாதார ரீதியிலும் ஒப்பனை துறை சார்ந்தும் இவர்களின் படைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.  அந்த வகையில் பூச்சோங் தமிழ்ப்பள்ளியின் இந்த சாதனை மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. மேலும் அந்த மாணவர்களின் பெற்றோர்கள், ஆசிரியப் பெருமக்கள் என அவர்களின் அர்ப்பணிப்பும் போற்றப்படுகிறது.