சுங்கைப்பட்டாணி, ஜன.15-
நாட்டின் 15ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி பெற்ற மகத்தான வெற்றிக்கு இனவாத பேச்சுகளும் ஆடம்பர இரவு விருந்து நிகழ்ச்சிகளுமே காரணம் என்று பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் ரஃபிசி ரம்லி ரஃபிசி ரம்லி சாடினார்.

பண அரசியல் மற்றும் “ நாட்டை மலாய்க்காரர்கள் அல்லாதோர் ஆட்சி புரிந்து விடுவார்கள்” என்று அடிக்கடி முழங்கி வந்தனர். இதுவே 15ஆவது பொதுத் தேர்தலில் இந்த இஸ்லாமிய கட்சி மிகப்பெரிய வெற்றி பெறுவதற்குக் காரணமாக அமைந்தது என்பதை ரஃபிசி சுட்டிக் காட்டினார்.

“இவர்கள் வெற்றி பெற்றதற்கு பண விவகாரமே காரணம். டிக் டாக் வீடியோ தாக்கத்தினால் அல்ல. எனது கிராமமான திரெங்கானுவில் தாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் பணத்தை எதிர்பார்த்ததாகக் கேள்வியுற்றேன். இது தவிர ஆங்காங்கே விருந்து நிகழ்ச்சிகள் வேறு” என்று கெடா மற்றும் பினாங்கு பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டதாக எஃப்எம்டி கூறியது..

15 ஆவது பொதுத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனல் 74 தொகுதிகளை வென்றது. இதில் பாஸ் கட்சிக்கு 49 இடங்கள்  கிட்டின. இத்தேர்தலில் தனிப்பட்ட கட்சியாக பாஸ் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது.

இதனையடுத்து ஜசெக (40),பிகேஆர் (31), அம்னோ (26) மற்றும் பெர்சத்து (25) ஆகிய கட்சிகள் திகழ்ந்தன.