கோலாலம்பூர், பிப்.9-
கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் பயனடையும் வகையில் எம்ஐடிஎஃப் எனப்படும் மலேசிய தொழிலியல் மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் மானியம் மற்றும் கடனுதவி குறித்த விளக்கக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
இங்குள்ள அச்சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எம்ஐடிஎஃப் நிதி மேம்பாட்டு பிரிவு, வர்த்தக ஆலோசனை பிரிவின் உதவி தலைவர் பஹாருடின் முஸ்லிம் இந்நிறுவனம் வழங்கும் மானியம் மற்றும் கடனுதவி திட்டங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
மானியங்களை உட்படுத்திய விண்வெளி, மின்னியல் & மின்சார முதலீட்டு நிதி (E & E), உற்பத்தி மேம்பாட்டு திட்டம்( GVPD), விற்பனை மேம்பாட்டு திட்டம்(GVMD) போன்றவை குறித்து விளக்கம் அளித்ததோடு இவற்றிற்கு எவ்வாறு விண்ணப்பம் செய்வது என்பது பற்றியும் தெளிவுற பேசினார்.
அடுத்து, மெது கடன்கள் தொடர்பான திட்டங்களான தானியங்கி & நவீனமய துறைக்கான கடனுதவி, குறுகிய கால ஊக்குவிப்பு திட்டம் (SFSAM), சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினருக்கான மெது கடனுதவி திட்டம் (SFSME), சேவைகள் வர்த்தக நிதி (SBF) நீடித்த & பசுமை வர்த்தக நிதி (SGBF), இலக்கவியல் & தொழில்நுட்ப துறைக்கான மெது நிதி திட்டம், எஸ்எம்இ மறுமலர்ச்சி திட்டம் மற்றும் ஜம்ஸ்டார்ட் நிதி திட்டம்(JSF) முதலியவை குறித்தும் பஹாருடின் வருகையாளர்களுக்கு விளக்கம் அளித்தார்.
இவரின் விளக்கமளிப்புக்குப் பின்னர் நடந்த கேள்வி நேர அங்கத்தில் பங்கேற்பாளர்கள் தங்களின் ஐயப்பாடுகளை முன் வைத்தனர். இவற்றிற்கு பஹாருடின் தெளிவான விளக்கத்தை அளித்தார்.
பல்வேறு வகையான வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் 50க்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
நாட்டிலுள்ள இந்திய சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினரின் மேம்பாட்டிற்காக கோலாலம்பூர்- சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் பல துறைகள் சார்ந்த விளக்கமளிப்பு கூட்டங்களுக்கு தொடர்ந்து ஏற்பாடு செய்து வருவதாக இச்சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.
இந்தியர்களின் பொருளாதாரம் வலுப்பெறும்போது அவர்களின் சொத்துடமையும் இயல்பாகவே மேம்படும்.இதற்கு வழிகாட்டி தேவை.இந்நோக்கத்திற்காக இதுபோன்ற பயனான விளக்கமளிப்பு கூட்டங்களுக்குத் தாங்கள் ஏற்பாடு செய்து வருவதாக இந்திகழ்ச்சியில் பேசுகையில் நிவாஸ் குறிப்பிட்டார்.


