ஸ்ரீ கெம்பாங்கான், பிப்.19-
இரண்டு பொதுத் தேர்தல்களில் அடைந்த தோல்விக்குப் பின்னர் தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகள் இக்கூட்டணி தோழமைக் கட்சிகளுடன் அணுக்கமான உறவைக் கொண்டிருப்பது அவசியம்  என்று துணை நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அகமது மஸ்லான் வலியுறுத்தினார் .

தேசிய முன்னணியில்  இதன் தோழமைக் கட்சிகளைச் சேர்த்துக் கொள்ளும் விவகாரத்தில் இக்கூட்டணியின் உறுப்புக் கட்சிகள் திறந்த மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என்று அகமது மஸ்லான் ஆலோசனை கூறினார்.

“தேசிய முன்னணியில் தற்போது 4 உறுப்புக் கட்சிகள் உள்ளன. இந்நான்கு கட்சிகளும் ஐ.பி.எஃப், கிம்மா, மக்கள் சக்தி, பார்டி சிந்தா மலேசியா, பஞ்சாபி கட்சி, மலேசிய இந்திய ஐக்கிய கட்சி ஆகிய 6 தேசிய முன்னணி தோழமைக் கட்சிகளுடன் வலுவான உறவைக் கொண்டிருப்பது அவசியம் “ என்று இங்கு ஐ.பி.எஃப் கட்சியின் 30 ஆம் ஆண்டு தேசிய பொதுப் பேரவையைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

“நாம் இரண்டு முறை பொதுத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளோம். இந்நிலையில்  தேசிய முன்னணியை வலுப் பெறச் செய்ய  நம்மிடையே ஒற்றுமை மிக முக்கியம்.கட்சி உட்பூசலைப் புறக்கணித்துவிட்டு மாறுபட்ட கோணத்தில் சிந்திக்கத் தொடங்குவோம்:” என்றார் அம்னோ தலைமைச் செயலாளருமான அகமது மஸ்லான்.

இது எனது தனிப்பட்ட கருத்து. எந்தவொரு முடிவும் எடுக்கும் அதிகாரம் தேசிய முன்னணி உச்சமன்றத்திற்கே உள்ளது. நான் உச்சமன்றத்தில் இடம் பெற்றிருக்கவில்லை.ஆகையால்,  கருத்துகளைத்  தெரிவிக்கும் நிலையில் மட்டுமே நான் இருக்கிறேன் என்றார் அவர்.

தற்போது ஒற்றுமை அரசாங்கத்தில் தேசிய முன்னணி சார்பில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களும் துணையமைச்சர்களும் இந்தியர்களின் நலனில்  நிச்சயம் கவனம் செலுத்துவர் என்று  முன்னதாக மாநாட்டைத் தொடக்கி வைத்து உரை நிகழ்த்துகையில் துணையமச்சர் குறிப்பிட்டார்.

பொருளாதாரத்தில்  முன்னேற்றம் காண கல்வி, தொழிற்கல்வி, வர்த்தகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்படி இந்தியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.

ஐ.பி.எஃப் நீண்ட காலமாகவே தேசிய முன்னணிக்கு விசுவாசமாக இருந்து வருகிறது. இதனைக் கருத்திற் கொண்டே 15ஆவது பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட இக்கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதைச் சுட்டிக் காட்டிய துணையமைச்சர் .இக்கட்சி முன் வைத்துள்ள கோரிக்கைகளை மேலிடத்தின் பார்வைக்குத் தாம் கொண்டு செல்லவிருப்பதாகச் சொன்னார்.