spot_img
15.2 C
London
spot_img
Home மலேசியா கல்வி தமிழ்ப்பள்ளிகள் கட்டிக் காக்கப்பட வேண்டும் !ஐபிஎஃப் மாநாட்டில் வலியுறுத்து

தமிழ்ப்பள்ளிகள் கட்டிக் காக்கப்பட வேண்டும் !ஐபிஎஃப் மாநாட்டில் வலியுறுத்து

0
402

ஸ்ரீ கெம்பாங்கான்,பிப்.19-
சில பள்ளிகளில் மாணவர்கள்  குறைவாக உள்ளனர் என்பதைக் காரணம் காட்டி தமிழ்ப்பள்ளிகளை மூட வேண்டாம் என்றும் இதற்குப் பதிலாக தோட்டப்புற மற்றும் தொலைதூர பகுதிகளில் உள்ள பள்ளிகளை புதிய வீடமைப்பு பகுதிகளுக்கு மாற்றும்படியும் ஐபிஎஃப் பேராளர் மாநாட்டில்  கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்நடவடிக்கையானது இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்து கட்டிக் காக்கப்படுவதற்கு உதவும் என்று ஐபிஎஃப் தேசிய தலைவர் டத்தோ லோகநாதன் துரைசாமி தெரிவித்தார்..

நாட்டின் 15ஆவது  பொதுத் தேர்தலில் ஜெலுத்தோங் நாடாளுமன்ற தொகுதியில்  போட்டியிட ஐபிஎஃப்  கட்சிக்கு வாய்ப்பு வழங்கிய தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ அக்மது ஜாகிட் ஹமிடிக்கு இவ்வேளையில் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.

ஐபிஎஃப்  கட்சிக்கும்  தனது  தோழமைக் கட்சிகளுக்கு தேசிய முன்னணி வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதை இங்கு காண முடிகிறது. அதே  வேளையில், கடந்த 30 ஆண்டுகளாக தேசிய முன்னணிக்கு ஐபிஎஃப் ஆற்றிய சேவைக்கு கிடைக்கப் பெற்ற அங்கீகாரமாகவே இது கருதப்படுகிறது என்று இங்கு நடைபெற்ற இக்கட்சியின் 30 ஆம் ஆண்டு பொதுப் பேரவையில் உரை நிகழ்த்துகையில் அவர் குறிப்பிட்டார்.

.நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 30 நாடாளுமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. எனினும், புதிய அரசாங்கத்தை அமைப்பதில் முடிவு செய்யும் ஆற்றலை இக்கூட்டணி கொண்டிருந்தது. மக்களின் நலனுக்காக எந்தவொரு தரப்பினருடனும் ஒத்துழைக்கத் தயார் என்பதை இதன் வழி தேசிய முன்னணி நிரூபித்துள்ளது  என்றார் அவர்.

மிகப் பெரிய நிதி ஒதுக்கீடு இன்றியும் , அரசு பதவிகள் இன்றியும் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வரும் ஐ பி எஃப் இந்தியர்களின் பிரச்னைகளைக் களைய வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது. இதன் பொருட்டு இந்தியர்களுக்கான வரைவு திட்டத்தைத் தொடரும்படி டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தை லோகநாதன்  கேட்டுக் கொண்டார்.

இதன் வாயிலாக பொதுச் சேவையில் 6 % இந்தியர்கள் எண்ணிக்கை, பொதுப் பல்கலைக்கழகங்களில் 6 % இந்தியர்கள் சேர்ப்பு,, இந்தியர்களின் சொத்துடைமையை 3 விழுக்காட்டிற்கு உயர்த்துவது போன்ற விவகாரங்களுக்குத் தீர்வு காணப்படும் என்று நாடு முழுவதிலும் இருந்து வருகை புரிந்த பேராளர்கள் முன்னிலையில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, நாட்டின் கல்வி முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். வேலை வாய்ப்பு மற்றும் புத்தாக்க அடிப்படையில் இது அமைந்திருக்க வேண்டும் என்று அவர் பரிந்துரை செய்தார்.

கட்சி எல்லோர் மத்தியில்  மதிக்கப்படுவதற்கு ஏதுவாக மேலவை உறுப்பினர், நகராண்மைக் கழக உறுப்பினர் மற்றும்  அரசு சார்பு நிறுவனங்களில் உயர் பதவிகள்  வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் இப்பேரவையில் முன் வைக்கப்பட்டது.