Homeசமூகம்போக்குவரத்து அமைச்சின் அங்கீகாரத்தோடு பணிப்படையில் இணைந்தது 'பல்ஸ்'

போக்குவரத்து அமைச்சின் அங்கீகாரத்தோடு பணிப்படையில் இணைந்தது ‘பல்ஸ்’

ஷா ஆலாம், பிப்.23–
போக்குவரத்து அமைச்சின் அங்கீகாரத்தோடு  தேசிய  பணிப்படையில் இணைந்துள்ள தீபகற்ப போக்குவரத்து தொழில்முனைவோர் சங்கம் (பல்ஸ்) சிறு மற்றும் நடுத்தர போக்குவரத்து நிறுவனங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குக் குரல் கொடுக்கும் என்று அச்சங்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்.புவனேஸ்வரி தெரிவித்தார்.

அமைச்சின்  பணிப்படையில் ஓர் அங்கமாக இருப்பதன் வழி, போக்குவரத்து தொழில்முனைவோர் எதிர்நோக்கும் பிரச்சினைகளைச் சம்பந்தப்பட்ட  அமைச்சுக்கும் அரசு தரப்பினருக்கும் நேரடியாகத் தெரிவிக்க முடியும் என்று  போக்குவரத்து தொழில்துறையினர் மற்றும் அரசு நிறுவனங்களுடனான உரையாடல் நிகழ்ச்சிக்குப்  பின்னர்  செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

முதன்முறையாக நடைபெற்ற இந்த உரையாடல் அமர்வு, பல்ஸ் சங்கத்தின் மிகப்பெரிய நடவடிக்கைகளில் ஒன்றாகும். இதில், போக்குவரத்து அமைச்சு,  தரை போக்குவரத்து நிறுவனம் (APAD), சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) போன்ற அரசு நிறுவனங்கள் கலந்துகொண்டன.

புஸ்பாகோம், மலேசிய வெளிநாட்டு வர்த்தக மேம்பாட்டுக் கழகம் (MATRADE), மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (MIDA), மலேசிய தொழில்துறை மேம்பாட்டு நிதி (MIDF), எஸ்எம்சி கார்ப், சுங்கத் துறை மற்றும் அரச மலேசிய போலீஸ் படை (PDRM) உட்பட 600க்கும் மேற்பட்டோர்  இதில் பங்கேற்றனர்.

தரை போக்குவரத்து நிறுவனம், சாலை போக்குவரத்து இலாகா, புஸ்பாகோம் ஆகியவை தங்களுக்கு வரி விலக்கையோ அல்லது வரியை  முற்றாக அகற்றும் சலுகையையோ  வழங்க வேண்டும் என்று இச்சங்கத்தினர் கோரிக்கையை முன் வைத்தனர்.

அதே வேளையில், சிறு மற்றும் நடுத்தர போக்குவரத்து நிறுவனங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் சம்பந்தப்பட்ட  துறைகளிடம் இவர்கள் வினவினர்.

இதனிடையே, நாட்டில் லாரி ஓட்டுநர்களை உட்படுத்திய சாலை விபத்துகளைக் குறைக்க பாதுகாப்புப் பாடநெறி வகுப்பு அவர்களுக்கு நேரடியாக வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதிசெய்ய வேண்டும் என ‘பல்ஸ்’ சங்கத்தின் துணைத் தலைவர் ஜோஸ்வா ரவி பரிந்துரை செய்தார்.

தீபகற்ப மலேசியாவில் போக்குவரத்து நிறுவனங்கள், சரக்குகளை அனுப்புபவர்கள், கிடங்கு நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து தொழில்முனைவர்களை உள்ளடக்கிய சங்கமே ‘பல்ஸ்’ ஆகும்.

100க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் 2017இல் நிறுவப்பட்டது ‘பல்ஸ்’,
போக்குவரத்து தொழில்முனைவோரின்  தொழில்துறையை மேம்படுத்தி, நீண்ட மற்றும் குறுகிய கால தீர்வுகளை வழங்குவதே  இச்சங்கத்தின் நோக்கமாகும்.

spot_img

latest articles

explore more