சிரம்பான், செப், 25-
நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சார்ந்த 61 தமிழ்ப்பள்ளிகளுக்கும் 100 எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் மாணவர்களுக்கும் மறைந்த இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மதுவின் தொல்காப்பியக் கடலில் ஒரு துளி எனும் இலக்கண நூல் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நூல் வழங்குவதற்கான மொத்த செலவையும் கிம்மா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ சையிட் இப்ராஹிம் காடிர் ஏற்றுக்கொண்டார். இந்நூல் வழங்கும் நிகழ்ச்சி இங்குள்ள இராஜ மெலேவார் ஆசியர் கல்விக் கழகத்தில் கடந்த சனிக்கிழமை வெகுச் சிறப்பாக நடந்தேறியது.
ஈப்போ குறிஞ்சித்திட்டுத் தமிழ்க்கழகமும், நெகிரி செம்பிலான் திணைக்களத் தமிழ்மொழிப் பிரிவும், இராஜ மெலேவார் தமிழ்த்துறையும் இணைந்து இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். காலை 8.00 மணி அளவில் தொடங்கிய இந்நிகழ்ச்சி மூன்று அங்கங்களாக நடைபெற்றது.

முதல் அங்கத்தில் இராஜ மெலேவார் ஆசிரியர் கல்விக் கழகத்தின் இயக்குநர் ஹாஜி பஹாரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். இரண்டாம் அங்கத்தில் கவிஞர் சீனி நைனா முகம்மது படைப்புகளை ஒட்டிய ஆய்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சீனி நைனா முகமத்துவின் கவிதைகளை வெவ்வேறு கோணங்களில் ஆய்வு செய்து பயிற்சி ஆசிரியர்கள் திறம்படப் தங்கள் படைப்புகளைச் செய்தனர்.
மூன்றாவது அங்கத்தில், தொல்காப்பியக் கடலில் ஒரு துளி நூல் அறிமுகமும் நூல் பகிர்வும் செய்யப்பட்டன. கெடா சுல்தான் அப்துல் அலிம் கல்விக்கழக விரிவுரைஞர் தமிழ்மாறன் மிக நேர்த்தியான முறையில் நூல் ஆய்வினை மேற்கொண்டார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட டத்தோஸ்ரீ சையிட் இப்ராஹிம் நூல் பகிர்வுக்கான மொத்தத் தொகை ரி.ம. 6100க்கான காசோலையை மேடையிலேயே ஏற்பாட்டுக் குழுவினரிடம் ஒப்படைத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் எஸ்.பி.எம், எஸ்.டி.பி.எம் மாணவர்களுக்குமான நூல்களை எடுத்து வழங்கினார். இந்நிகச்சியில் கல்வி இலாகா அதிகாரிகள், விரிவுரைஞர்கள், ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள், பொது இயக்கங்களின் பிரதிநிகள், பொதுமக்கள் எனச் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
