கோலாலம்பூர், செப்.12-
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டும் மனம் வேண்டும்.அவர்களைப் பார்த்து நாம் சந்தோஷப்பட வேண்டுமே தவிர பொறாமைப்படக் கூடாது என்கிறார் ஜெயபக்தி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜூ.
“முயற்சி செய்தால் எல்லோரும் வெற்றி பெறலாம். காரணம், வெற்றி அனைவருக்கும் சொந்தமானது” என்று இங்குள்ள ஜெயபக்தி மண்டபத்தில் மனித வள அமைச்சர் வ. சிவகுமார் 30 தமிழ்ப்பள்ளி நூலகங்களுக்கு புத்தகங்களை வழங்கிய நிகழ்ச்சியில் உரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டார்.
உனக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும். வெற்றி பெற்றவர்களை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஜெயபக்தி நிறுவனத்தை உருவாக்குவதில் தான் சந்தித்த சவால்களை விவரிக்கையில் குறிப்பிட்டார்.
நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் நூலகங்களுக்கு புத்தகங்களை அன்பளிப்பு செய்திருக்கும் அமைச்சர் சிவகுமாரின் நடவடிக்கையைப் பாராட்டிய டத்தோ செல்வராஜூ இப்புத்தகங்கள் மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை மேம்படுத்துவதோடு சிந்தனைத் திறனையும் வளர்க்க உதவும் என்றார்.
அதே வேளையில், மாணவர்கள் தங்கள் நேரத்தை நல்ல வழியில் செலவழிப்பதையும் உறுதிப்படுத்தும். இது உயர்பண்பு நெறிமிக்க மாணவர் சமூகத்தை உருவாக்கும் என்று அவர் மேலும் சொன்னார்.
குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மலேசிய இந்தியர் சமூக வர்த்தக தொழில் சம்மேளனத்தின் தலைவர் டத்தோ ஆர். இராமநாதன், மலேசிய இந்தியர் பொற்கொல்லர் நகைக் கடை சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், மலேசிய இந்தியர் சிகை அலங்கரிப்பாளர் சங்கத்தின் தலைவர் சுதந்திரம், மலேசிய இந்தியர் ஜவுளி உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் டத்தின் மகேஸ்வரி, கோலாலம்பூர் வெற்றி சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் பி.எஸ். பிள்ளை, செராஸ் ஷான் முத்துசாமி, தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.