வறுமை ஒழிப்பு, வேலையில்லா திண்டாட்டப் பிரச்னையைக் களைய தீவிர நடவடிக்கையில் டாக்டர் குணராஜ்!

22

கிள்ளான், செப்.13-

தனது தொகுதி மக்கள் உட்பட இம்மாநில மக்களிடையே வறுமை மற்றும் வேலையில்லா திண்டாட்டப் பிரச்னை இனியும் நீடித்திருக்காமல் இருப்பதை உறுதிப்படுத்தும் பொருட்டு செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜார்ஜ் மனித வள அமைச்சர் சிவகுமாருடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை உள்ளடக்கிய மடானி பயண திட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

செந்தோசா சட்டமன்ற தொகுதியில் அண்மையில் தொடக்கம் கண்ட இப்பயணம் இனி நாடு முழுமையும் விரிவாக்கம் காணும் என்று தெரிவிக்கப்பட்டது.

மடானி அரசாங்கத்தின் இலட்சியத்திற்கு ஏற்ப வறுமை ஒழிப்பு மற்றும் வேலையில்லா பிரச்னைக்குத் தீர்வு காணுதல், நோய்களைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதற்கு இலவச சுகாதார முகாம், மித்ரா விளக்கக் கூட்டம், சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் உதவி திட்டங்களுக்கான பதிவு, பாதுகாப்பு செய்முறை பயிற்சி, ஆற்றலை மேம்படுத்துவதற்கான முதலாளி & தொழிலாளர் பயிற்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வட்டார மக்கள் நலனுக்காக ஏற்பாடு செய்யப்பட்டன.

அதோடு பெர்கேசோ, வேலையிட மற்றும் சுகாதார பாதுகாப்பு நிறுவனம்,  எச்ஆர்டிகோப் ,பிடிபிகே, டேலண்ட் கார்ப், 99 பேரங்காடி, இயோன், மை வெண்ட்சர் கேப்பிட்டல், யுஓபி வங்கி போன்ற தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் செந்தோசா சட்டமன்றம் மக்களுக்குப் பயனான இந்நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்நிகழ்ச்சியில் பல்லினங்களைச் சேர்ந்த 100 பேருக்கு உணவு கூடைகள் வழங்கப்பட்ட வேளையில் பி 40 பிரிவைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு மடிக்கணிகளும் அரசாங்கத்தின் உதவி வாயிலாக 3 மாணவர்களுக்கு பிடிபிகே கடனைத் திருப்பிச் செலுத்தும் உதவியும் வழங்கப்பட்டன.

கடந்த வெள்ளிக்கிழமை வேலை நாளையும் பாராது அதிகமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இந்நடவடிக்கை அதிகமானோரிடம் சென்று சேர்ந்துள்ளதையேப் புலப்படுத்தியுள்ளது.