சின்னராசா உருமிமேள மாசான காளியின்”நாயகன்” குறும்பட பாடல் வெளியீடு

37

கோலாலம்பூர், செப்.18-

சின்னராசா உருமிமேள மாசான காளியின் 15  கலைஞர்களின் கடும் முயற்சியில் அதிகாரப்பூர்வ வெளியீடு கண்டது “நாயகன்”  குறும்பட பாடல்.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘பிள்ளையார்பட்டி நாயகனே’ என்ற தலைப்பில் அமைந்த இப்பாடல் ஃபினாஸ் மலேசியா, காம்ளெக்ஸ் ஸ்டூடியோ மெர்டேக்கா, பி.ரம்லி அரங்கில் நேற்று   வெளியீடு கண்டது.

பிரபல உள்ளூர் இயக்குநர் பி,ஜெகனின் இயக்கத்தில் உருவான இப்படத்தின் காட்சிகள் மோரிப் கடற்கரையில் எடுக்கப்பட்டன. இக்காட்சியில் நடித்த உறுமிமேள கலைஞர்கள் அனைவரும் அதே உடையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது இப்பாடலுக்கு ஓர் உயிரோட்டத்தைக் கொடுத்தது.

சிஆர் வீரா எழுதி, பாடிய இப்பாடலில்  உருமி  மேள இசையோடு பாரம்பரிய இசையும் கலந்திருப்பதே இதன் சிறப்பாகும் என்கிறார் 30 வருடங்களுக்கு மேலாக உருமி மேள கலைஞராகத் திகழ்ந்து வரும்  சிஆர் விக்கி.

” சித்தார் இசையை கீரனும் மிருதங்க இசையை அஸ்வினும் வழங்கியுள்ளனர். இவ்விரு பாரம்பரிய இசையுடன் உறுமிமேள இசையும் சேரும்போது  பாடலுக்கு  மேலும் இனிமை சேர்த்துள்ளது” என்றார் விக்கி.

இது  எங்களின் புது முயற்சியாகும். முதன் முறையாக பாரம்பரிய இசையோடு இணைந்து பாடலை உருவாக்கியுள்ளோம் . இனி வரும் காலங்களில் மேலும் சிறந்த படைப்பை எங்களால் வழங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இப்பாடல்   விநாயகப் பெருமானைப் பற்றியது என்பதால்  பாடல் காட்சிகள் எப்படி  அமைந்திருக்க வேண்டும் என்பது குறித்து தான் ஆராய்ந்ததோடு சில கற்பனைகளையும் பாடலில் புகுத்தியதாக இயக்குநர் பி.ஜெகன் தெரிவித்தார்.

“தொழில்நுட்ப விவகாரத்திலும், கலைஞர்களின் முக பாவனையிலும் அதி கவனம் செலுத்தினேன். நான் விரும்பியபடியே கலைஞர்கள் அருமையாக நடித்தனர். காட்சிகளும்  அருமையாக அமைந்தன” என்றார்.

இப்பாடல் காட்சிகள் ஒரே நாளில் எடுக்கப்பட்டவை. இதற்கு முழு ஒத்துழைப்பை வழங்கிய லையன் ஹை பிட்சர்ஸ் தருக் & குழுவினருக்கு ஜெகன்  நன்றி தெரிவித்துக் கொண்டார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் டத்தோ சுல்கிப்ளி, மகேந்திர குருக்கள், நடிகரும், இயக்குநருமான சுகன் பஞ்சாட்சரம் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.