September 19, 2023 1:54 p
ஷா ஆலம், செப் 20-
பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பு பணிகள் உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி
ஒதுக்கீடு வழங்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக வெளியான புகாருக்கு எதிராக தக்க கவனம் செலுத்தப்படும் என்று கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் வாக்குறுதி அளித்திருப்பதாக கோல சிலாங்கூர் தொகுதி பி.கே.ஆர்.
தலைவர் தீபன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் முழு உதவி பெறும் பள்ளிகளுக்கும் பகுதி உதவி பெறும் பள்ளிகளுக்கும் இடையே வேறுபாடு நிலவுவதாக வெளியான புகார் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று ஃபாட்லினா சீடேக் உறுதி அளித்திருப்பதாக தீபன் கூறினார்.
இதன் அடிப்படையில் பகுதி உதவிப் பெறும் பள்ளிகளுக்கு ஒற்றுமை அரசாங்கம் உதவி
வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை அமைச்சர் மறுத்துள்ளதோடு
தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி உதவி பெறும் பள்ளிகளுக்கு (பந்துவான்
மோடால்) நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டதோடு அண்மையில்
நடைபெற்ற சந்திப்பின் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதாக தீபன் தெரிவித்தார்.
மொழி பாகுபாடு காட்டாமல் மோசமான நிலையிலுள்ள அனைத்துப் பள்ளிகள்
விஷயத்தில் உரிய கவனம் செலுத்தும்படி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஃபாட்லினா சீடேக் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தேவையின் அடிப்படையில் அனைத்து மொழி பள்ளிகளுக்கும்
கல்வியமைச்சு உதவி மற்றும் மானியத்தை வழங்கி வருகிறது.
ஆனால், நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பகுதி உதவிப் பெறும்
பள்ளிகளுக்கான நடைமுறை சற்று மாறுபட்டது. பள்ளி நிலம் மற்றும்
சொத்துகளை பள்ளி மேலாளர் வாரியங்களே நிர்வகிக்கும் காரணத்தால்
அந்த மானியம் அந்த வாரியத்திடமே ஒப்படைக்கப்படுகிறது என்று டாக்டர்
ஜலிஹா விளக்கமளித்துள்ளார்.
உடனடி சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய நிலையில்
பள்ளிகள் இருந்தால் அது குறித்து கடிதம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக
அமைச்சு மற்றும் தமது கவனத்திற்கு கொண்டு வரும்படியும் அவர்
கேட்டுக் கொண்டார்.
அதே வேளையில், பகுதி உதவிப் பெறும் பள்ளிகளை முழு உதவிப் பெறும்
பள்ளிகளாக மாற்றுவதற்கான பரிந்துரைகளை சம்பந்தப்பட்ட பள்ளி
நிர்வாகங்களிடமிருந்து தாம் வரவேற்பதாகவும் இந்த மூலம் பகுதி உதவிப்
பெறும் பள்ளிகள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண
முடியும் என்றும் அவர் நம்பிக்கைத் தெரிவித்ததாகவும் அவர்
மேலும் கூறினார்.
பள்ளிகளில் மிகவும் மோசமான நிலையிலுள்ள கழிப்பறைகளை
சீரமைப்பதற்கு அனைத்து பள்ளிகளுக்கும் தலா 70,000 வெள்ளி
வழங்கப்படும் என கல்வியமைச்சர் அறிவித்திருந்த நிலையில்
அத்திட்டத்தில் பகுதி உதவிப் பெறும் தமிழ்ப்பள்ளிகள் விடுபட்டது
தொடர்பில் தமிழ்ப்பள்ளிகளின் பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மற்றும்
பள்ளி மேலாளர் வாரியங்கள் வெளியிட்ட மனக்குறைகளை இச்சந்திப்பின் போது அமைச்சரின் கவனத்திற்குத் தாம் கொண்டு சென்றதாகவும் தீபன் சொன்னார்.




