கட்சியை வலுப்படுத்த கிளைகளை சீர்படுத்துவதில் மஇகா கவனம்!- டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்

173

கோலாலம்பூர், அக்.15-

கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களால் மட்டுமே கட்சிக்கு வலிமை சேர்க்க முடியும் . இதன் அடிப்படையில்  கிளைகளை வலுப்படுத்துவதில் மஇகா தற்போது கவனம் செலுத்தி வருவதாக  இக்கட்சியின் தேசிய தலைவர்  டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அஸ்திவாரம் சரியாக இருந்தால்தால் கட்சி வலுப் பெற முடியும். அவ்வகையில் கிளைத் தலைவர்கள் மக்களுக்குச் சிறந்த  சேவையை வழங்கும்போதுதான் மக்கள் அவர்களை அடையாளம் காணத் தொடங்குவார்கள். இவர்கள் மரியாதைக்குரியவர்களாக இருக்கும்போதுதான்  மக்கள் மத்தியில் மரியாதைக்குரிய  ஒரு கட்சியாக மஇகாவும்  திகழ முடியும் என்றார் அவர்.

கல்வி அடிப்படையில் மஇகா போன்ற  உதவி செய்யக்கூடிய  ஓர் அரசியல் இயந்திரம் இப்போதும் இல்லை. 10 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட வரப் போவதில்லை. எங்கள் இலக்கு எல்லாம்  மஇகா  கட்டிடம், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் என்று சென்று கொண்டிருக்கிறது. இதனை உறுப்பினர்கள் அறிந்துள்ளனர். உணராதவர்களுக்கு தெளிவுப்படுத்துவதற்கு எங்களுக்கு நேரம் கிடையாது என்று தலைநகர், செராஸ்  மலூரி, 3 பிரவுன் பாய்ஸ் விருந்தினர் மண்டபத்தில் நடைபெற்ற மஇகா கூட்டரசு பிரதேசத்தின் 77 ஆம் ஆண்டு பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடத்தில் பேசினார்.

மக்கள் சக்தியுடன் இணைந்து செயல்பட மஇகா  முன் வந்திருப்பது இரு கட்சிகளின் ஒரே இலக்கான  இந்தியர்களின் மேம்பாட்டை  உறுதிப்படுத்துவதை எளிதாக்கும் என்று முன்னதாக மாநாட்டில் உரை நிகழ்த்துகையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

மஇகாவைக் கட்டுக் கோப்பாக வழிநடத்தி வரும் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன்- டத்தோஸ்ரீ எம். சரவணன் தலைமைத்துவத்திற்கு கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டும் என்று மாநாட்டில் உரை நிகழ்த்தியபோது மஇகா கூட்டரசு பிரதேச தொடர்பு குழு தலைவர் டத்தோ எஸ்.ராஜா கேட்டுக் கொண்டார்.

 மஇகா கூட்டரசு பிரதேச செயலாளர் டத்தோ கே.விஜயமோகனின் வரவேற்புரையுடன் தொடங்கப்பட்ட இப்பேராளர் மாநாட்டில் மஇகா  தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், உதவி தலைவர்கள் டத்தோ அசோஜன், டத்தோ கோகிலன் பிள்ளை, செயலாளர் டத்தோ ராஜசேகரன், தினாளன் ராஜகோபாலு ஆகியோரோடு இதர  பொறுப்பாளர்கள், மாநில தொகுதி காங்கிரஸ் தலைவர்கள், கிளைத் தலைவர்கள் , செயற்குழு உறுப்பினர்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். 

மூன்றாவது தவணையாக  மஇகா தேசிய தலைவர்  மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்குப் போட்டி இருக்கக் கூடாது, கட்சி மற்றும் உறுப்பினர்களின் நலனுக்காக  தேசிய தலைவர் எடுக்கும் எந்தவொரு முடிவுக்கும் கட்டுப்படுதல் மற்றும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு அரசு மன்னிப்பு வழங்க பரிந்துரை செய்தல்  ஆகிய மூன்று தீர்மானங்களை  மஇகா கூட்டரசு பிரதேச துணைத் தலைவர் டாக்டர் பாலகுமாரன்  இப்பேராளர் மாநாட்டில் முன் வைத்தார்.