பெட்டாலிங் ஜெயா, நவ. 7-
வரும் தீபாவளி பண்டிகையை ஊடகவியல் துறையைச் சேர்ந்தவர்கள் குதூகலமாகக் கொண்டாடும் வகையில் பிரதமர் துறை விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.
இங்குள்ள பிரபல உணவகம் ஒன்றில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமரின் முதிர்நிலை அரசியல் செயலாளர் டத்தோஸ்ரீ சம்சுல் இஸ்கந்தர் முகமது அக்கின், பிரதமரின் ஊடக பிரிவு செயலாளர் தெங்கு நாய்ஷ் ஆகிய இருவர் சிறப்பு வருகை புரிந்தனர்.
அரசாங்கத்தின் செயல் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் மிகப் பெரிய பங்கை ஆற்றி வருகின்றன. இதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சார்பில் அனைத்து ஊடகங்களுக்கும் இவ்வெளையில் தாம் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக நிகழ்ச்சியில் பேசிய டத்தோஸ்ரீ சம்சுல் குறிப்பிட்டார்.
” மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரசாங்கத்தின் செயல்பாடுகளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் ஆற்றி வரும் அளப்பரிய பங்களிப்பை நாங்கள் போற்றுகிறோம். இதன் அடிப்படையில் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் தமிழ் ஊடகவியலாளர்களுக்காக இந்த விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார் அவர்
பிரதமர் துறையின் ஊடக பிரிவின் ஆதரவில் பிரதமருக்கான சிறப்பு பொறுப்புகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழ்ப் பத்திரிகைகள், வானொலி, தொலைக்காட்சி மற்றும் மின்னியல் ஊடகங்களின் செய்தியாளர்கள் கலந்து கொண்டனர்.




